Friday 9 October 2015

'ஊடக அறம்' பேசும் யோக்ய சிகாமணிகளே...!



ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார். அவரைப்பிடிக்க காவல்துறை 3 தனிப்படைகளை அமைத்துள்ளது. இந்நிலையில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் நேர்காணல் அளித்திருக்கிறார். அதில் முழுக்க முழுக்க தன் தரப்பு வாதத்தை அளித்திருக்கிறார்.

ஒரு ஊடகம் குற்றம் சாட்டப்பட்டவரின்  நேர்காணலை எடுத்து வெளியிடுவதைத் தவறு என்று சொல்ல முடியாது.  ஆனால் அது அதற்குரிய பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறதா என்பது முக்கியம்.

குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் ஒப்பிக்கும்  கருத்தை அப்படியே வெளியிடுவது ஊடகத்தின் பணி அல்ல. கோகுல்ராஜ் மரணத்தில் புதைந்துள்ள பல்வேறு மர்மங்க‌ளை வினாக்களாகத் தொடுத்திருக்கலாம். ஆனால் அங்கு எதையும் கேள்வி கேட்காமல் யுவராஜ் சொன்ன செய்தியை அப்படியே வெளியிடுவது பணம் வாங்கிப் பணியாற்றும் பி.ஆர்.ஓ.க்களின் வேலை. இங்கு புதிய தலைமுறை செய்துள்ள அப்படிப்பட்ட பணியைத் தான். (நக்கீரன் கோபாலாவது ஒப்புக்காகவும், எதிராகவும் சந்தன வீரப்பனிடம் சில கேள்விகளாவது கேட்டார்.)

தேடப்பட்டு வரும் குற்றவாளி குறித்த தகவல் தெரிந்த குப்பனோ ,சுப்பனோ காவல்துறையிடம் தெரிவிக்க‌வில்லை என்றாலோ, மறைத்தாலோ அது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் சொல்கிறது. அவனிடம் இருந்து உண்மையை வரவழைக்க காவல்துறை சம்பந்தப்பட்ட நபரைத் தூக்கிச் சென்று என்னவிதமான சித்திரவதையையும் செய்து உண்மையை வரவழைக்கவும் தயங்காது. ஆனால் செய்தியாளர்கள் தங்களது தொழில் நிமித்தம் காரணமாக மேற்கண்டவற்றில் இருந்து விலக்கும் பாதுகாப்பும் பெறுகிறார்கள். பல உச்ச நீதிமன்றத்தீர்ப்புகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. அந்த நியதியின் படி இங்கும் புதிய தலைமுறை அப்படியான விலக்கு கோரலாம். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் ஊடகத்துக்குரிய பொறுப்புடன் புதிய தலைமுறையும் அதன் நிருபரும் நடந்து கொள்ளவில்லை. யுவராஜின் சம்பளம் வாங்கும் பி.ஆர்.ஓ.க்கள் போல‌த் தான் செயல்பட்டுள்ளார்கள்.

ஆக இவர்களுக்கு எதற்கு விதிவிலக்கு?

(சட்டப்படி இவர்களுக்குப் பாதுகாப்பு இருந்தாலும்) இந்த நேர்காணலில் சம்பந்தப்பட்டவர்களை, புதிய தலைமுறையின் ஆசிரியர் குழுவினரைக் காவல்துறை விசாரித்து தேவையான உண்மைகளைப் பெறுவதே சரியாக இருக்கும் என்று தார்மீக ரீதியில் மாற்றுக்குரல் எழுப்பப் பட்டால் அதனை முழுக்கத் தவறென்று கூற முடியாது.

ந்த நேர்காணலினால் ஏற்பட்ட அசிங்கத்தை மறைக்க ஊடக அறம் குறித்த விவாதம் வேறு. படித்த மேதாவிகளாக நீங்கள் இருக்கலாம். ஊடக அறம் போன்ற மேட்டிமைத்தனங்கள் கோகுல்ராஜ் பெற்றோருக்கு புரியுமா? விஷ்ணுபிரியா பெற்றோருக்கு புரியாமா?



அதிலும் நெறியாள்கையின் பொழுது கடந்த தேர்தலில் நடுநிலையாக நடந்து கொண்டதாக தங்களுக்குத் தாங்களே நற்சான்றிதழ் வேறு. (52.06 நிமிடம் ) இவர்கள் வாங்கிய ஒரு சீட்டுக்கும், அடையப் போகும் அனுகூலத்துக்கும் கூலிக்கு மாரடித்த கதையை நாம் தேர்தலின் பொழுதே அம்பலப்படுத்தினோம்.கூச்சமில்லாமல் அதை வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.வெட்கம் கெட்டவர்கள். இந்த லட்சணத்தில் ஊடக அறம் குறித்த விவாதத்தை "அவுக பாராட்டுறாக, இவுக பாராட்டுறாக" என சுய தம்பட்டம் சகிக்கவில்லை.

நாம் சொல்வது இது தான்.

கவர் வாங்கிச் செய்தி போடுபவனுக்கும், தங்கள் தொலைக்காட்சியை முன்னணியில் நிறுத்திக்கொள்ள எவ்வித அறமும் இன்றி பொறுப்பின்றிச் செய்தி வெளியிடும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

அது தனி மனித தவறு. இது ஒட்டுமொத்த நிறுவனமும் விலை போன நிகழ்வு. தலை குனியுங்கள், அதை விடுத்து இதைப் பெருமை பேசித் திரியாதீர்கள்.

2 comments:

Pandian said...

நீங்கள் எதாவது பத்திரைக்கை நிறுவனம் வைத்துள்ளீர்களா, புதிய பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டும் எனில் என்ன செய்வது, aavenkat614@gmail.com

Anonymous said...

We expect your article on kumudham reporter's leggings report.