Monday 27 April 2015

குமுதம் கூட்டுக்களவாணி…! அர்ச்சனை வைரமுத்துவுக்கு மட்டும்..!


டந்த வாரம் முழுவதும் இணையம் முழுவதும் வைரமுத்துவின் மீதான அர்ச்சனை தான். ’குமுதம்’ வார இதழில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பாராட்டி  மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடிதம் எழுதினார் என்று அதை ‘குமுதம்’ வெளியிட்டது. அதையொட்டித் தான் சர்ச்சை தொடங்கியது. 

அதே ’குமுதம்’ இதழில் தொடர் எழுதிவரும் ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி இது என் தந்தை எழுதிய கடிதம் இல்லை என முகநூலில் மறுக்க இணையம் பற்றிக்கொண்டது. அதன் மறுநாள்  கோலப்பன் The hindu வில் இதனை முக்கிய செய்தியாக்க தொடர்ந்து வைரமுத்துவை வரிசை கட்டி அடித்தார்கள். 

வைரமுத்து புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யத் துணிபவர்,இதையும் செய்திருப்பார் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழைப்  படித்த எவரும் முழுக் களவாணித்தனமும் வைரமுத்துவிடம் இல்லை. என்பதையும் ’குமுதம்’ இதழுக்கும் இதில் முக்கியப்பங்கு உள்ளது என்பதையும் அறிய முடியும்.

கடிதத்தை பிரசுரித்த ’குமுதம்’ அதற்கு முன்பு ஒரு பக்கத்திற்கு இதனை வெளியிட்டிருக்கிறது.

//ஜெயகாந்தன் தன் கடைசி நாட்களில் குமுதத்தில் வெளிவரும் வைரமுத்து சிறுகதைகளைப் படித்தும் படிக்கச் சொல்லிக் கேட்டும் வந்தார் என்று அறிந்தோம். அதுகுறித்த அவரது அபிப்ராயத்தைப் பதிவு செய்ய முடியுமா என்று அன்போடு கேட்டோம். அதை ஒரு கடிதமாக கவிப்பேரரசு வைரமுத்துவின் வீட்டுக்கே ஆள் மூலம் அனுப்பி விட்டார்.//

குமுதத்தில் வெளிவரும் வைரமுத்துவின் சிறுகதைகள் குறித்த அபிப்ராயத்தை  ஜெயகாந்தனிடம் நாங்கள் கேட்டோம்.அவர் அதனை வைரமுத்துவின் வீட்டுக்கே அனுப்பி விட்டார் என குமுதம் சொல்கிறது. வைரமுத்து என்ன சொல்கிறார் ? 

வீட்டுக்கு ’வந்த’ கடிதத்தை வெளியிடக் கொடுத்திருக்கிறார். ஆக இதில் தவறு நடந்துள்ளது எங்கு ? 




குமுதத்திடம் இருந்து தான் தொடங்குகிறது. கருத்தை ஜெயகாந்தனிடம்  கேட்டோம்,கவிஞரின் வீட்டுக்கு ஆள் மூலம் கடிதத்தை அனுப்பி விட்டார் எனக் குமுதம் தான் சொல்கிறது. அதன்பின்பு ’தி இந்து’ ரிப்போர்ட்டர்  கோலப்பன் கேட்கையில் வேறு என்ன பதிலை வைரமுத்துவால் சொல்ல இயலும்..? 

ஆம்.கடிதம் வீட்டுக்கு வந்தது என்று தான் வைரமுத்து சொல்ல முடியும்..? இல்லை குமுதம் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது என்றோ இல்லை என் வீட்டில் தயாரித்தேன் என்றா சொல்ல முடியும்.? 

இதன்படி பார்த்தால் வந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் சேர்ப்பித்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் வைரமுத்துவிடம் இல்லை. மோசடி முழுக்க முழுக்க குமுதத்தின் மீது தான் இருக்கிறது. வைரமுத்து அதற்கு உடந்தை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

னால் ஜெயகாந்தனின் மகள் எழுதிய பதிவின் படி 



இதன்படி பார்த்தால் வைரமுத்து மீது தான் முழுக்கத் தவறு இருக்கிறது. இவரே ஒரு கடிதத்தைத் மோசடியாகத் தயாரித்திருக்கிறார். ஆனால் அதனை நேரடியாக வெளியிடாமல் குமுதம் வார இதழ் கடிதம் கேட்டதாகவும் அதன்படி ஜெயகாந்தன் பாராட்டுப் பத்திரத்தை வீட்டுக்கு அனுப்பியதாகவும் குமுதம் ஆசிரியர் குழுவை திரைக்கதை எழுத வைத்திருக்கிறார். 

தன் மோசடிச் செயலுக்கு குமுதத்தை உடந்தையாக்கி  இருக்கிறார். மோசடியில் பி.எச்.டி பட்டம் பெற்ற அவர்களும் இதனை மகிழ்ச்சியாய்ச் செய்திருக்கிறார்கள். 

தனது வார இதழில் வெளியாகும் வைரமுத்துவின் சிறுகதைகளைப் பிரபல்யமாக்கும் நோக்கத்துடனும் அதனைப் புத்தகமாகப் பதிப்பிக்கும் பொழுது அது ’குமுதம் பப்ளிகேஷன்ஸ்’ வெளியீடாக வரும் பொழுது அதற்கு இலக்கிய அந்தஸ்து கொடுப்பதற்கும் அதன் சந்தை மதிப்பை அதிகப்படுத்தவும் ’குமுதம்’ இதழ் தெரிந்தே துணை போயிருக்கிறது. குமுதம் உடந்தையாய் இருந்ததால் தான் இவ்வளவு பெரிய மோசடியைச் செய்து மிகப்பெரிய அறுவடையைச் செய்யவும் வைரமுத்து துணிந்து இறங்கியிருக்கிறார்.

 இதனால் இருவருக்கும் ஒருசேர லாபம். கடிதம் கண்ட 'கவிஞர்' வீட்டுக்குச் சென்று நன்றி சொன்னாராம் என மோசடியில் தனக்குத் தொடர்பில்லாதது மாதிரி முன் எச்சரிக்கையாய் கிசுகிசு பாணியில் பாலோ அப் செய்தியையும் குமுதம் எழுதியிருக்கிறது. 



ஆனால் இணையப் பயன்பாட்டாளர்களும்,அறிவுஜீவிகளும் ’தி இந்து’ கோலப்பனும்,குமுதத்தில் தொடர் எழுதும் ஜெயகாந்தனின் மகளோ ஒட்டுமொத்தமாய் வைரமுத்துவின் மீது மட்டுமே பாய்கிறார்கள். அதற்கு ஒன்று வைரமுத்துவின் மீதான வெறுப்பு காரணமாய் இருக்க முடியும்,அல்லது குமுதம் இதழ் மீதான பாசம் அல்லது குமுதத்தைப் பகைத்தால் என்றாவது அதில் வெளிவரும் துக்கிணியூண்டுச் செய்தி வராமல் போய்விடக்கூடாதே என்ற முன் எச்சரிக்கை என ஏதாவது ஒன்று காரணமாய் இருக்க முடியும். அல்லது சம்பந்தப்பட்ட குமுதம் வார இதழைப் படிக்காமல் தான் படித்த, கேட்ட செய்தியை வைத்துக்கொண்டு எழுதித் தள்ளுவது மட்டுமே காரணமாய் இருக்க முடியும்.

இவ்வளவு நடந்தும் சம்பந்தப்பட்ட ’குமுதம்’ இதழோ ஒரு வருத்தமோ,விளக்கமோ எதுவும் வெளியிடாமல் அடுத்த இதழைக் கொண்டு வந்துள்ளது. வைரமுத்துவைப் போல தான் செய்த மோசடித்தனத்தில் கடைசி வரை உறுதியாய் நின்று உண்மையாக்கி விடமுடியும் என நம்புகிறது போலும். 

மாபெரும் எழுத்தாளனின் மரணத்தில் கூட மோசடித்தனம் செய்து புகழுக்கும் வணிகத்துக்கும் வெறிபிடித்து அலையும் வைரமுத்துவும் குமுதமும் சரியான ஜோடி தான்.

No comments: