Friday 8 August 2014

பொய்மையின் புகலிடம் தினமலர்...!



பொதுமக்கள் எதிர்பார்ப்பு,கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்,நம்பகமான வட்டாரங்கள் கூறின,விரைவில் நடவடிக்கை உறுதி, பின்னணி காரணம்,கிசுகிசுத்தனர்,புலனாய்வில் கிடைத்த தகவல் என்பன போன்றவைகள் எல்லாம் எப்பொழுதும்  பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு தான்தோன்றித்தனமாய் எவ்விதப் பொறுப்புமற்றும் உள்நோக்கத்துடனும்,ஆர்வத்துடனும் வெளியிடும் பக்கங்களை நிரப்பும் பழக்கம் 'புலனாய்வு' இதழ்கள் செய்பவை. இவர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் அத்தி பூத்தாற் போல் நடந்தால் அதற்காய் தங்களுக்குத் தாங்களே தற்பெருமை கொள்ளும் இவர்கள் சொன்னது நடக்க வில்லை என்றால் எவ்வித மறுப்போ வருத்தமோ தெரிவிக்காமல் கடந்து செல்வார்கள்.

'புலனாய்வு' என்று சொல்லிக் கொள்ளும் இதழ்களின் இந்தக் கேடுகெட்ட குணாம்சம் தினசரி இதழிலும் உண்டு.

அதிலும் மற்ற‌ நாளிதழ்களை விட டி.வி.ராமசுப்பையரின் மகன்களும் பேரன்களும் நடத்தும் தினமலரில் ம‌லிந்து காணப்ப‌டும். தங்களின் சொத்துப்பிரச்சனையில் ஐந்து முதலாளிகளும் பத்துப் பதிப்புகள தொடர்பாக ஒற்றுமை இல்லாமல்  நீதிமன்றப் படியேறி தீர்வை  நோக்கிக் காத்திருந்தாலும்  இந்த விஷயத்தில் மட்டும் இவர்களின் அனைத்துப் பதிப்புகளிலும் ஒற்றுமை உண்டு.

தினமலரின் 'புலனாய்வு' தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் இந்தப் பதிவு.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



 .திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ராஜினாமாவுக்கு அவருக்கும்,அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும் ஏற்பட்ட‌ பிரச்சனை தான் காரணம் என கட்சி வட்டாரங்கள் சொன்னதாய் அதன் நிருபர் வார்த்தைகளை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்.

ஆனால் மறுநாள்  (07-08-2014) அன்று காலை 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளிதழில் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்ன காரண‌த்துக்காய் ராஜினாமா என்று அனைத்துக் காரணங்களையும் எழுதியிருந்தனர்.



அதே நாள் மதியம் பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதிய கடிதமே அனைத்து  ஊடகக்காரர்களிடமும் கிடைத்தது.அதில் தனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று எழுதியிருக்கிறார்.அதில் ஒரு வரி கூட தினமலர் புலனாய்வு நிருபர் சொன்ன படி அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் குறித்து எழுதவில்லை.



ஆக முதலில் தினமல்ர் எழுதிய 'செய்தி' வழக்கமான கட்டுக்க‌தை என்று தெரிகிறது. 30-07-2014 தேதியிட்ட ராஜினாமா குறித்து ஐந்து நாட்கள் கழித்த பின்னும் ஒழுங்காய் துப்பறியத் தெரியாத துப்புக் கெட்ட தினமலர் மறுநாள் ஆங்கில இதழில் காரணங்களை எழுதிய  பின்பு, ராஜினாமாவின்  நகல் அனைவருக்கும் கிடைத்த பின் கல்யாணசுந்தரத்தின் பேட்டி என்ற ஒன்றை வாங்கி வெளியிடுகிறது. ஆனால் தவறான செய்திக்கு ஒரு மறுப்பும் இல்லை.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.



தான் தவறாய் வெளியிட்ட செய்தியை மறைக்க கல்யாணசுந்தரத்தின் பேட்டியை வெளியிட்டு மறைக்கப் பார்க்கிறது என எண்ணலாம்.ஆனாலும் கற்பனைக் கதை எழுதும் புத்தியை அவ்வளவு எளிதில் விட முடியுமா..?



கல்யாணசுந்தரத்தின் பேட்டிக்கு இடப்புறமே இன்னொரு செய்தியில் கல்யாணசுந்தரத்தின் ராஜினாமாவுக்கு அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நடந்த பிரச்சனை தான் காரனம் என்று திரும்பவும் பழைய கட்டுக்கதையை எழுதி வெளியிட்டுள்ளது. ஒருவேளை அதுவும் ஒரு காரணம் என்று தினமலர் கருதும் பட்சத்தில் அது குறித்து ஒரு கேள்வியை கேட்டு கல்யாணசுந்தரத்திடம் இருந்து பதிலை வாங்கிப் போட வேண்டியது தானே..?

இதிலிருந்து ஒரு உண்மை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இப்படி எழுதும் நிருபர்க‌ள் யாரும் எங்கும் களத்தில் இறங்கி செய்தி சேகரிப்பதும் கிடையாது. உண்மையை மட்டுமே வெளியிட வேண்டுமென்று எண்ணுவதும் கிடையாது.அதனை அறிய மெனக்கெடுவதும் கிடையாது. பக்க‌த்தை நிரப்ப அமர்ந்த இடத்தில் இருந்த படி எதையாவது எழுதி வெளியிடுவது தான் இவ‌ர்கள் நிறமும் குணமும்.

இதில் உண்மையின் உரைகல் எனத் தலைப்பு வேறு.தினமலர் பொய்மையின் புகலிடம் என்பது தான் சரி. 

No comments: