Wednesday 26 February 2014

தி இந்து-செய்திகளைத் திரிப்பதில் தினமலரின் வாரிசு...!



கற்பனைக் கதையை எழுதிய கோவிந்தராஜ்.

the hindu


நாளிதழ் என்றால் முன்பெல்லாம் அன்றாட நாட்டு நடப்புகளும்,அரசியல் நிகழ்வுகளும் பெருமளவு இடம் பெற்றிருக்கும்.ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் செய்தித்தாளுக்குப் பதிலாக கருத்துத் தாளாக த்தான் வெளிவருகிறது. செய்திக்கட்டுரைகள் அத்துறையுடன் தொடர்பில்லாதவர்களால் அதிகம் எழுதப்படுகிறது என்றால், இன்னொரு புறம் உண்மையான நிகழ்வுகளை செய்தியாக்குவதற்குப் பதிலாக செய்தியாளர் அல்லது டெஸ்க்கில் இருப்பவர்களின் விருப்பத்தை செய்திகளுடன் திணித்து வெளியிடுவது தான் அதிகம் நடக்கிறது. 

இத்தகைய செய்தியாளர்கள் தங்கள் அரசியல் கொள்கைக்குப் பிடிக்காத ஒரு செய்திப்பதிவில், தங்கள் 'திறமை'யைக் காட்டுகின்றனர்.  செய்தியைப் பெயரளவுக்கு வெளியிட்டு அத்துடன் "பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்", "கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்", "கூறப்படுகிறது" , "நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று  ஏதாவது ஒரு வார்த்தைகளைப் போட்டுத் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் சொந்த அரிப்புக்களையும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்கின்றனர். சில நேரம் ஆட்சி அதிகாரத்தில் இருப்ப‌வர்களின் கூட்டுடனும் இது நடைபெறுகிறது. 

இவ்வாறு வெளிவரும் செய்திகள் எப்பொழுதும், எழுதும் பத்திரிகையாளரின் வேலைக்கு உலை வைப்பதாகவோ மற்றும் நிறுவன அரசியலுக்கோ,நிறுவனத்தின் வணிக ஆதாயங்களுக்கு எதிராகவோ,அதற்குப் பாதிப்பை உண்டாக்குவதாகவோ இருக்காது.மற்ற‌படி இந்தச் செய்திகளால் எவன் வீட்டில் எழவு விழுந்தாலும்,யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும்,சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவர்களுக்கு எந்தக் கவலையோ அது குறித்த வருத்தமோ, ஊடக அறத்திற்கு எதிரானது என்ற‌ குற்ற உணர்ச்சியோ மயிரளவும் இல்லை. நிறுவனத்தின் ஆசி இதற்கு எப்பொழுதும் உண்டு.

தினமலர் தான் இந்தக் கேடுகெட்ட கலாச்சாரத்தின் முன்னோடி.முன்பு தினமலர் மட்டும் செய்து வந்த வேலையை இப்பொழுது விற்பனையிலும் உள்ள‌டக்கத்திலும் அதன் போட்டி நாளிதழான தி இந்துவும் செய்து வருகிறது.

நேற்று (25-02-2014)  தி இந்து தமிழ் நாளிதழ் சென்னை பதிப்பில் வெளியான செய்தி ஒன்றைப் பார்ப்போம்.

ஈரோட்டில் நடைபெற்ற மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு குறித்த செய்திப்பதிவு.

 செய்தி அக்கறை உடைய உண்மையான செய்தியாள‌ன் என்றால் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கில் யார் கலந்து கொண்டார்கள், யார் என்ன பேசினார்கள்,யார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்,எத்தனை பேர் குழுமியிருந்தனர்,மற்ற கூட்டங்களில் பேசப்படாத செய்தி எதுவும் பேசினார்களா..? என்பன போன்ற செய்திகளை முதன்மையாக உள்ள‌டக்கிய செய்திப்பதிவாக இருந்திருக்கும்.

ஆனால் அக்கப்போரும் தனக்கு எதிர் அரசியல் உள்ள‌வர்களை வன்மத்துடன் பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு செய்த செய்தியாளர் அல்லது டெஸ்க்கில் இருக்கும் உதவி ஆசிரியர் என்பதால் நடைபெற்ற நிகழ்வு எப்படிப் பதிவு ஆகியிருக்கிற‌து பாருங்கள்.




கருத்தரங்கில் பங்கேற்ற ராஜீவ் கொலைவழக்கின் கைதியான பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இந்த வழக்கில் உழைத்தவர்களில் ஒருவரான வைகோவுக்கு நன்றி தெரிவிக்கவில்லையாம்.இந்த ஒற்றை நூலை வைத்துக் கொண்டு ஒரு கட்டுரை ஆகத் தொடுத்து தி ஹிந்து தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள‌து.

அற்புதம் அம்மாள் நேரமின்மை காரணமாகவோ,அல்ல‌து எல்லாக் கூட்டத்திலும் எல்லோர் பெயரையும் நன்றி சொல்லத் தேவை இல்லை என்று கருதியோ அல்லது யார் பெயரும் விடுபட்டால் அது பிழையாகி விடும் என்று கருதியோ யார் பெயரையும் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அதனால் இந்த போராட்டத்தின், 'எதிர்பாராத‌' புதிய வரவான தமிழக முதல்வர் பெயரை மட்டும் சொல்லியிருக்கலாம்.

கண்டிப்பாய் உள் நோக்கத்துடன் வைகோ அவர்களின் பெயரைத் தவிர்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அதே 'தி இந்து ' நாளிதழில் சமஸ் என்னும் பத்திரிகையாளருக்கு அதே நாளில் அளித்த பேட்டியில் வைகோ உட்பட அனைவரின் பெயரையும் சொல்லியிருக்கிறார்.

ஆக உள் நோக்கம் எதுவும் இல்லை என்பது புலனாகிறது.

ஆனால் செய்திப்பதிவை  எழுதியவருக்கோ,டெஸ்க்கில் இருப்ப‌வருக்கோ,அல்லது வெளியிட்ட நிறுவனத்துக்கோ மூவர் விடுதலையில் உண்மையான அக்கறை இல்லை என்பதும் எதையாவது எழுதி இந்த விஷயத்தில் பிரச்சனைகளை உருவாக்குவதும் தானே நோக்கம்.
அதனால் தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவுப் பிரச்சாரம்-ம.தி.மு.க.வினர் அதிர்ச்சி என செய்திகளை புதிதாய் உருவாக்குகிறது.


அற்புதம் அம்மாள்


கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்றால் செய்தியாளர் என்ன செய்திருக்க வேண்டும்.?

கூட்டத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க. நாடாளுமன்ற‌ உறுப்பினர் கணேச மூர்த்தியிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்க வேண்டும்.அல்லது கொளத்தூர் மணியிடம் கருத்து வாங்கி வெளியிட்டிருக்க வேண்டும்.எதுவும் இல்லை.இல்லை தொடர்புடைய வைகோ விடமாவது கருத்துக் கேட்டிருக்க வேண்டும். ( ஹிந்து பத்திரிகையாளர் போன் என்றால் அண்ணாச்சி இரவு 12 மணியானாலும் போன் எடுத்து பேசுவார்.) அற்புதம் அம்மாள் தனது பெச்சில் தேர்தல் குறித்தோ,அதில் ஆளுங்கட்சியை ஆதரிப்பது குறித்தோ எந்த வார்த்தையும் பேசவில்லை. 

ஆனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம்,ஆதரவாளர்கள் அதிர்ச்சி என்று செய்தியை அலுவலகத்தில் அமர்ந்து திட்டமிட்டு உருவாக்கி வெளியிடுகிற‌து.

மூவர் தொடர்புடைய விஷயத்தில் ஆரம்பம் முதலே வன்மத்துடன் அணுகிய நாளிதழ் தி ஹிந்து நாளிதழ். தொடங்கிய முதல் நாளே வேலூர் சிறையில் இருக்கும் மூவரின் மீது தனது வன்மத்தை முதல் பக்கத்தில் காட்டியது 

ராஜீவ் மரண வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர் விடுதலை குறித்த பிரச்சனையில் மட்டுமல்ல, பல பிரச்சனைகளில் 'The Hindu' ஆங்கில நாளிதழ் நேரடியாக எதிர்க்கும். தமிழ் ஹிந்து நாளிதழோ ஆதரிப்பது போல பல கட்டுரைகளை வெளியிட்டு போக்கு காட்டி விட்டுத் தனது மறைமுக எதிர்ப்பை சரியாகச் செய்யும். 

(ஆனால் முற்போக்காளர்கள் பலருக்கு அங்கு பத்தி எழுத வாய்ப்பு கொடுக்கப் படுவதால் யாரும் இது குறித்து மூச்சு விடுவதில்லை.தனக்கு அங்கு இனி இடம் இல்லை என்று ஒரு நாள் உறுதியான அன்று பாப்பான் பத்திரிகை என்று திட்டுவார்கள் என கண்டிப்பாய் நம்பலாம்.)


ரு செய்தியைத் தன‌து விருப்பம் மற்றும் அரசியலுக்காய் தி இந்து  திரித்தும் இட்டுக்கட்டி புதிதாய் உருவாக்கியும் வெளியிட்டுள்ளது. இனி இந்த இட்டுக் கட்டிய செய்தியால் என்ன நடக்கும்.?

உண்மையாகவோ அல்லது வேறு வழியின்றியோ அல்லது சுயநல அரசியலுக்காகவோ ஏதோ ஒரு காரண‌த்துக்காய் இதுவரை ஒன்றாய் இந்த பிரச்சனையில் பணிபுரிந்த பல்வேறு கட்சியினர்,மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் மத்தியில் இது ஒரு தேவையற்ற விவாதப் பொருளாகவும்,நோக்கத்தை  திசை திருப்புவதாகவும்  உருவாகும். இதுவரை மூவர் விடுதலை விஷயத்தில் பலலைக் கடித்துக் கொண்டு வேறு வழியின்றி அமைதியாய் இருந்த தி.மு.க.வினர் இந்தச் செய்திக்குப் பின்,உடனே களத்தில் இறங்கி வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்று அற்புதம் அம்மாளை விமர்சிக்க‌த் தொடங்கி விட்டன‌ர்.  

இன்னொரு பக்க‌ம் இது எந்த எதிர் விளைவுகளை உருவாக்கும் எனப் பார்த்தால்,

அற்புதம் அம்மாளுக்கு ஆளுங்கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் எண்ணம் உண்மையில் இல்லாமல் இருந்தால் இச்செய்தி அவருக்கு இக்கட்டைத் தான் உருவாக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் குறித்த காலமே இருக்கிற‌து.அதற்குள் ஏதாவது ஒரு பத்திரிகையாளன் பரபரப்புக்காகவோ,அல்லது உள் நோக்கத்துடனோ,உண்மையாகவோ அற்புதம் அம்மாளிடம், "நீங்கள் ஆளுங்கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் எப்பொழுது தொடங்குகின்றீர்கள்?"  என்று கேள்வியை எழுப்பும் பொழுது அற்புதம் அம்மாள், எனக்கு அந்த எண்ணம் இல்லை என்று தனது  பதிலாகச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது இதே தி  ந்து உட்பட அனைவரும் "அற்புதம் அம்மாள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்ய திடீர் மறுப்பு. ஜெயலலிதா கோபம்.மூவர் விடுதலையில் சிக்கல்..!  பின்னணி என்ன..? "

என்று தங்களுக்குத் தோன்றியதை எல்லாம் எழுதி  பகக்ங்களை நிரப்பி செய்தியைத் திட்டமிட்டு  உருவாக்குவர். அவர்களின் குப்பையை விற்பதற்குத் தான் இது உதவும்.

அனைத்திலும் அரசியல் என்றான இந்தக் கால கட்டத்தில் அப்பொழுது  அது மூவர் விடுதலையில் உண்மையில் சிக்கலைத் தான் உருவாக்கும்.

விடுதலை தடுத்து நிறுத்தப்பட்டாலும் சரி,எழுவர் விடுதலை நோக்கிய பயண‌த்தில் சிறு தொய்வை ஏற்படுத்தினாலும் , இதில் எது நடந்தாலும் சரி, அது இச்செய்தியை எழுதிய நிருபரின் அல்லது உருவாக்கிய நிறுவனத்தின் வெற்றி தான்.எப்படியோ அந்தக் குடும்பம் நாசமானாச் சரி தான் என்னும் வடிவேலுவின் நகைச்சுவைக்கு ஒப்பான அவலச்சுவை இது.

ஆக மொத்தத்தில் நிறுவனத்தின் உள்ளார்ந்த‌ விருப்பம் நிறைவேறுகிறதுசெய்தியாளரின் சில்லரைப்புத்தி என்று இதனை குறுக்கிப் பார்த்து ஒதுக்கி விட முடியாது.

சில மாதங்களுக்கு முன் காஞ்சி சங்கரராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கர மட சுப்ரமணியை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்ப‌ட்டது. அந் நிகழ்வை தி ந்து செய்தியைப் பதிவு செய்ததுடன் நிறுத்திக் கொண்டது.

தீர்ப்புக்குப் பின்  நீதிமன்ற‌ வளாகத்தில் குழுமியிருந்த சங்கரமட பக்தர்கள் ஜெயலலிதாவை விமர்சித்தனர் என்றோ,கூடியிருந்த மாமிகள் ஜெயலலிதாவுக்கு சாபம் விட்டனர் என்றோ, கைது செய்த ஜெயலலிதா அரசுக்கு எதிராக சங்கராச்சாரி தேர்தல் பிரச்சாரம் செய்யத் திட்டம் என்றோ நினைத்ததை எழுதாமல் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதோடு 'அடக்கத்துடனும் பொறுப்புடனும்' நடந்து கொண்டது.

அப்படி எழுதுவது தங்கள் தலையில் தானே மண் அள்ளிப் போடுவதற்குச் சமம் என்பது முதலாளியில் இருந்து வேலை செய்பவர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

இது தான் இந்து, தினமலர் வகையறாக்களின் இதழியல் 'தர்மம்'...!


குறிப்பு-இந்தக் கதையை எழுதிய கோவிந்தராஜ் இதற்கு முன் தினமலரில் வேலை பார்த்தவர்.அதன் பின் இப்பொழுது  தி இந்து நாளிதழின் ஈரோடு நிருபராய்ப் பணிபுரிகிறார்.இந்தப்பணிக்கு பலர் நேர்காணலுக்கு வந்த பொழுதும் நம்மவா என்னும் அடிப்படையில் இவருக்கு பணிபுரிய வாய்ப்பளிக்கபப்ட்டுள்ள‌து.தின்மலரின் உதிரித்தனம் இங்கும் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறது.

இவரது முகநூல் பக்கம் இது தான்.



No comments: