Sunday 25 December 2011

என்று தணியும் இந்த‌ நக்கீரனின் பொய்யும் புரட்டும்?



கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பார்கள்.ஆனால் எத்தனை முறை அம்பலப்பட்டுப் போனாலும் கூச்ச நாச்சமின்றி படிக்கும் வாசகனை எப்பொழுதும் மடையனாக நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுத்து விபச்சாரம் செய்வதில் முன்னணியில் நிற்பது தான் நக்கீரனின் புலனாய்வு.

உண்மை துணிவு உறுதி என கொள்கை முழக்கத்துடன் வெளிவந்த நக்கீரன் தனது ஆரம்ப காலத்தில் அவ்வாறு பயணித்தது உண்மை தான்.ஆனால் பாதை மாறி பயணம் மாறி பல காலம் ஆகி விட்டது.
இவ்வாறு விற்பனை செய்து வரும் நக்கீரனின் இந்த வாரக் கேவலமான வியாபார உத்தியினை மட்டும் பார்ப்போம்.

இந்த வார டிசம்பர் 24-27,2011 தேதியிட்ட அட்டையின் தலைப்பு என்ன தெரியுமா?

என்ன நடந்தது?விவரிக்கிறார் சசிகலா!



இந்த வார அட்டையைப் பார்த்தால் தான் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களையும்,தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான பிரச்சனையையும்,இதுவரை வெளிவராத பகீர்பின்னணி தகவல்களையும் சசிகலா மனம் திறந்து நக்கீரனிடம் பிரத்யேகமாக பேட்டி அளித்தது போல தலைப்பு வைக்கப் பட்டிருக்கிறது.
இதனைப் பார்க்கும் வாசகனும் இதனைப் பார்த்து விட்டு உடனே 10 ரூபயைக் கொடுத்து நக்கீரனை வாங்குகிறான்.இதைத்தான் நக்கீரனும் எதிர்பார்க்கிறது,தலைப்பு வைக்கிறது.

ஆனால் நக்கீரனின் உள்ளே படித்தால் சசிகலா பேட்டி அளித்தது போலவோ,அல்லது விவரிப்பது போலவோ,அல்லது சசிகலாவின் வட்டாரங்கள் சொல்லிய தகவல்கள் என்றோ பெயருக்குக் கூட ஒரு குறிப்பும் இல்லாமல் வெளிவந்திருக்கிறது.

வெளிவந்த செய்தி இது தான்.



இது தான் நக்கீரனின் நிருபர் "உமர் முக்தார்" புலனாய்வில் கிடைத்த தகவல்கள்.அவமானத்திற்கு என்ன பரிகாரம்,உறவு பற்றி உளவு என மேலும் 2 பக்கங்களையும் நிரப்பியிருக்கிறார்.இதைப் படித்தால் நக்கீரன் நிருபர் பக்கத்தில் இருந்து பார்த்து எழுதியது போல் எழுதப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதில் எல்லா புலனாய்வு இதழ்களும் வரிந்து கட்டி கற்பனைகள் கலந்து தான் நினைத்ததை எழுதினாலும் இதில் நக்கீரனின் புளுகு தான் மிக உச்சகட்டமான அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு,நினைத்துப் பார்க்க முடியாத கற்பனை.குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களைப் படியுங்கள்.

எனக்கு அரசியல்ங்கிறது தலையில வைக்கிற பூ மாதிரி தான். எப்ப வேணும்னாலும் தூக்கி எறிஞ்சிடுவேன். இவங்கதான் என்னைப் பிடிச்சி இழுத்து அரசியலில் இருக்கச் சொன்னாங்க.

“”பெரியம்மா ஏன் உங்களையும் வெளியே அனுப்பிட்டாங்கன்னு சொந்தபந்தங்கள் கேட்டபோது, கண்கள் கலங்க விளக்கியிருக்கிறார் சசிகலா.

“”திங்கட்கிழமை காலையில 7 மணிக்கு என்னை அக்கா(ஜெ) எழுப்பு னாங்க. அந்த நேரத்தில், சோவும் கார்டனுக்கு வந்திருந்தார். முதல்நாள் நைட்டுதான் என்கிட்டே அக்கா கோவமா பேசிட்டுப்போய் படுத்தாங்க. காலையிலும் அவங்க கோபம் குறையல. என்னைப் பார்த்து, “நீ இந்த வீட்டைவிட்டுட்டுப் போயிடுன்னு சொன்னாங்க. நான் பேசாம நின்னுக்கிட்டிருந்தேன். அப்ப அவங்க, “உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துட்டுப்போயிடுன்னு கடுகடுன்னு சொன்னாங்க. அப்ப சோ என்னைப் பார்த்து ஒரு மாதிரி நக்கலா சிரிச்சிக்கிட்டே இருந்தாரு.

அக்கா என்கிட்டே, “உனக்கு என்ன வேணுமோ எடுத்துட்டுப் போன்னு சொன்னாங்க. அதுக்கு நான், இந்த வீட்டுக்கு வரும்போது எந்த சொத்துபத்தையும் கொண்டுகிட்டு வரலை. அதனால எதையும் எடுத்துட்டுப்போகவும் விரும்பலை. எனக்கு எந்த ஆஸ்தியும் தேவையில்லைன்னு சொன்னேன்

நான் வெளியே வர்றப்ப, பிரியா வீட்டுல மட்டும் போய் தங்கு. வேற எங்கேயும் தங்கக்கூடாதுன்னு அக்கா சொன் னாங்க.

ப்படி வாய்க்கு வந்ததை,பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல எழுதிவிட்டு அட்டையில் தலைப்போ சசிகலாவின் நேர்காணல் இடம் பெற்றிருப்பதைப் போல வைத்திருக்கிறது.இப்படி வைத்ததனால் நக்கீரனுக்கு என்ன பிரயோஜனம்?

எப்பொழுதும் அடுத்த நக்கீரன் வரும் வரை கிடைக்க வாய்ப்பிருக்கும் நடப்பு நக்கீரன் இதழ் இந்த வாரம் வெளிவந்த சனிக்கிழமையே விற்பனை முழுவதும் முடிந்து விட்டது.

இது போதாதா நக்கீரனுக்கு?இது என்ன பிழைப்பு!வழிப்பறித் திருடரைப் போல எதற்கு வாசகனின் பாக்கெட்டில் இருந்து 10 ரூபாயைத் திருட வேண்டும்?

ந்தப் பிழைப்பு நக்கீரனுக்குப் புதிதல்ல.ஏற்கனவே பல முறை நடைபெற்றுள்ளது தான்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் உச்சத்தில் இருந்த பொழுது,அதாவது 2009 ஆம் ஆண்டு எப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த தமிழினமே பதைபதைத்து,துடிதுடித்து நின்ற பொழுது அதனை அனைத்துப் பத்திரிக்கைகளும் விற்றுக் காசாக்கினாலும் அவர்களிடம் குறைந்தபட்சம் ஒரு ”நேர்மை” இருந்தது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு விட்டு,உலக வல்லாதிக்க சக்திகள் அனைத்தும் தமிழினப் படுகொலையை ஒன்றிணைந்து நடத்திய பொழுது,இனம் அழிவில் விளிம்பில் நின்ற பொழுது,அந்த துரோகத்தையும் துரோகத்துக்கு துணை நின்றவர்களையும் அம்பலப்படுத்தாமல்,விமர்சிக்காமல்,கருணாநிதியின் அருகில் இருந்து கொண்டு அவரை நியாயப்படுத்திய படியே இனப்படுகொலையைச் செய்தியாக்கி காசு பார்த்ததில்,இதழியல் தர்மத்தை செல்லாக் காசாய் மாற்றியதில் நக்கீரனுக்குப் பெரும்பங்கு உண்டு.

இதில் உச்சகட்டமாக ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின் பொழுதுமக்கள்அனைவரும் மரணக் கொட்டடியில் நின்று கொண்டிருந்த தருணம்.


 அப்பொழுது (ஏப்ரல் 23,2009)வெளிவந்த நக்கீரன் அட்டை இதுதான்.

இந்த அட்டையைப் பார்த்தால் மரணத்துக்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும்,அந்த நேரத்தில் தான் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து ஜெகத் கஸ்பரிடம் சொல்லியது போலவும்,அதனை நக்கீரன் வெளியிடுவது போலவும் இந்த அட்டையில் சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

இறுதிக் கட்டப்போர் ஈழத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மன உளைச்சலுடனும்,ஆற்றாமையிலும்,தாங்க முடியாத துயரத்திலும்,வேதனையிலும் துவண்டு கொண்டிருந்த தமிழ் வாசகன் என்ன நினைத்து இதை வாங்குவான்?சாவின் விளிம்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டி அளித்திருக்கிறார்,அதில் என்ன சொல்லியிருக்கிறாரோ?அதனை நாம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தானே வாங்கியிருப்பான். 

9 ரூபாய் பணம் கொடுத்து வாங்கி உள்ளே படித்தாலோ எப்பொழுதோ ஜெகத் கஸ்பரிடம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சொல்லியதாக கட்டுரை வந்துள்ளது.


இதை விட பெரிய அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது?வாங்கிய பின் வாசகன் எவ்வளவு ஏமாற்றத்துக்கு உள்ளாவான்?எவ்வளவு வெறுப்புக்கு உள்ளாவான்?நக்கீரனை எப்படிக் காறித் துப்பியிருப்பான்?இது என்ன இதழியல் தர்மம்?

ஆனால் நக்கீரனுக்கு இதைப் பற்றி என்ன கவலை?அந்த இதழ் விற்றுத் தீர்ந்தால் போதும்.அடுத்த இதழ் விற்பதற்கு வேறு பொய்யையும் புரட்டையும் புதிதாக யோசித்தால் போச்சு. இன்னொரு முறை ஏமாற மாட்டானா இளித்தவாய் வாசகன்?இப்படித்தான் இருக்கிறது நக்கீரனின் எழுத்தும் விற்பனையும்.

இந்த லட்சணத்தில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தலைப்பு வேறு.

ஒரு காலத்தில் அநியாயங்களையும் தவறுகளையும் தட்டிக்கேட்டு இதழ் உலகில் கோலோச்சிய நக்கீரன்,அனைவராலும் இது நம்ம இதழ் என்று கொண்டாடபட்ட நக்கீரன் தனது சுயநலச் செயல்பாட்டால் இன்று வாங்க ஆளில்லாமல் தேங்கிக் கிடக்கிறதுஆனாலும் நக்கீரன் திருந்தியபாடில்லை.

நக்கீரன் நடுநிலையுடனும் நேர்மையுடனும் செயல்படுவதன் மூலமே உண்மை துணிவு உறுதி யுடன் உண்மையில் பணியாற்றுவதன் மூலமுமே பழைய இடத்தையும் பெயரையும் மீட்டெடுக்க முடியும்.இது நக்கீரனுக்காக மட்டும் சொல்லப் படுவதல்ல.

ஆரோக்கியமான போட்டி இருந்தால் தான் மற்ற பத்திரிக்கைகளும் ஒழுங்காகவும் நேர்மையாகவும் செயல்படும்.

நக்கீரன் செய்யுமா?

3 comments:

MADHANKUMAR said...

nakkiran peyaril matum than. adhu karunanithiyin thuthi padi.

guna said...

jounalist prostitute

கறுத்தான் said...

நக்கீரன் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகை கல் ஒன்றுகூட நமக்கு ஆனதாய் இல்லை இவர்கள் ஆள்பவர்களை அண்டி பிழைத்து அவர்களுக்கு ஆதரவான கருத்துருவாக்கம் செய்யும் தரகர்கள்