Thursday 20 October 2011

போட்டுத் தள்ளிடுவேன்-கொலை மிரட்டல் விடுத்த வரதராசன் மீது காவல் நிலையத்தில் குமுதம் வடிவமைப்பு நிர்வாகி புகார்.



குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிர்வாக இயக்குனர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பி.வரதராசன் என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி குமுதம் குழும பத்திரிக்கையில் தலைமை வடிவமைப்பு நிர்வாகியாக வேலை பார்க்கும் சாய் என்பவர் சென்னை செக்ரேட்டரியேட் காலனி காவல் நிலையத்தில் (G5) புகார் மனு அளித்துள்ளார்.புகார் அளித்ததற்கு உரிய ரசீதும் பெற்றுள்ளார்.அதன் நகல்கள் மற்றும் புகாரின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.


 ஏப்ரல் 24,2010 அன்று கைது செய்யப்பட்டு சென்னை காவல்துறை குற்றப்பிரிவு விசாரணைக்கு வரதராசன் அழைத்து வரப்பட்ட பொழுது எடுக்கப் பட்ட புகைப்படம்.



அனுப்புனர்

பி.ஜி.சாய்குமார்,
த.பெ,ஞானவேல்,
டி/106,அப்பர் தெரு,
ஜாபர்கான் பேட்டை,
சென்னை-83
பெறுநர்,
காவல்துறை ஆய்வாளர்,
ஜி.5,செக்ரட்டேரியட் காலனி காவல் நிலையம்,
செக்ரட்டேரியட் காலனி,
சென்னை.
பெருமதிப்புக்குரிய அய்யா,
சாய்குமார் என்கின்ற நான்,1988 ஆம் ஆண்டு குமுதம் நிறுவனத்தில் பக்க வடிவமைப்பாளராக (லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டாக)வேலைக்குச் சேர்ந்தேன்.என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை இதுநாள் வரை நான் அப்பழுக்கின்றி செய்து வந்திருக்கிறேன்.என் மீது இதுவரை எந்தவிதக் குற்றம் குறையும் இல்லை.
குமுதம் வார இதழ் திரு.எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களால் நிறுவப்பட்டது.தற்பொழுது குமுதம் குழுமத்தின் தலைவராகவும்,உரிமையாளராகவும் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் புதல்வர் ஆவார்.
குமுதம் குழுமத்தின் பெருவாரியான பங்குகள் தற்பொழுது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களது குடும்பத்தினரின் வசமே உள்ளன.அதில் சில பங்குகள் பி.வரதராஜன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டன.
தற்பொழுது சென்னை-4,மைலாப்பூர்,லஸ் அவென்யூ,3 ஆம் எண்ணில் வசிப்பவரான திரு.பி.வரதராஜனுக்கு குமுதம் குழுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு திரு.பி.வரதராஜன் குமுதம் குழுமத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ ரூ.25 கோடியை மோசடி செய்து விட்டதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.கிரைம் எண்.196/2010.யு/எஸ் 406,420 ஐ.பி.சி.பிரிவுகளில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு.பி.வரதராஜன் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திரு.வரதராஜனின் அடாவடி நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்களை நானும் என் போன்ற குமுதம் ஊழியர்கள் சிலரும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்குத் தருவதாக திரு.வரதராஜனுக்குத் தவறான சந்தேகம் ஏற்பட்டது.அதன் அடிப்படையில் அவர் எனக்கும் என் போன்ற சில ஊழியர்களுக்கும் பல விதங்களில் தொல்லை தர ஆரம்பித்தார்.
21-9-2011 அன்று நான் குமுதம் அலுவலகத்தின் லேஅவுட் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அலுவலகத்தின் கணிப்பொறி பிரிவைச் சேர்ந்த திரு.சண்முகநாதன் அதிரடியாக எனது பிரிவுக்கு வந்தார்.எனது கம்ப்யூட்டரை சோதனை செய்ய வேண்டும் என்றார்.
எனக்கு அது விநோதமாகப் பட்டது.என் கம்ப்யூட்டரை ஏன் சோதனை செய்ய வேண்டும்? என்று விளக்கம் கேட்டேன்.அப்போது திரு.பி.வரதராஜனின் செயலாளரான திருமதி.சுமதி,சட்ட ஆலோசகர் திரு.அந்தோணி,எச்.ஆர்.பிரிவைச் சேர்ந்த பிரியங்கா,குழும ஆசிரியர் கோசல்ராம் போன்றவர்கள் அங்கே ஒன்றாகத் திரண்டு வந்து காரணமில்லாமல் என்னைத் திட்டத் தொடங்கினார்கள்.மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என்று என்னை அவர்கள் மிரட்ட ஆரம்பித்தார்கள்.
அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக திரு.பி.வரதராஜனின் அறைக்கு இழுத்துச் சென்றார்கள்.அங்கே என்னை மிரட்டி வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள்.
அப்போது திரு.பி.வரதராஜனின் தூண்டுதலின் பேரில்,ரவுடிகள் மாதிரியான சிலர் திடீரென என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என நான் பயந்து போனேன்.
அதன்பின் அவர்கள், அவர்கள்  விருப்பத்தின் படி என்னை ஒரு கடிதம் எழுத வைத்தனர்.அதில் பலவந்தமாக என்னைக் கையெழுத்திடவும் செய்தனர்.
அப்போது திரு.பி.வரதராஜன்,அவருக்கு எதிரான கிரிமினல் வழக்கில் நான் ஏதாவது சாட்சியம், ஆதாரம் அளித்தால் என்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார்.என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக நாசமாக்கி விடப் போவதாகவும் மிரட்டினார்.
அந்த வகையில் நான் அப்போது எழுதித்தந்த கடிதம் என் முழு விருப்பப் படி நான் எழுதிய கடிதம் அல்ல.அது மிரட்டலுக்குப் பயந்து நான் எழுதித்தந்த கடிதம்.நான் கையெழுத்திட்டுத் தந்த வெற்றுத் தாள்களால் நாளை என் எதிர்காலத்துக்கு ஆபத்து வருமோ என நான் அஞ்சுகிறேன்.
என்னைப் பலவந்தப்படுத்தி அவர்கள் விருப்பப்படி கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட அவர்கள்,அதன்பின் என்னை சற்று நேரம் தாமதிக்கச் செய்து எனது தற்காலிக வேலை நீக்கத்துக்கான உத்தரவை எனக்குத் தந்தார்கள்.கையெழுத்துப் போட்டு அதைப்பெற்றுக் கொள்ளும்படி என்னை நிர்ப்பந்தித்து அதையும் சாதித்துக் கொண்டார்கள்.பிறகு நான் அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப் பட்டேன்.
எனக்குத் தரப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவு,அடிப்படை உறுதியற்ற நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.அந்த சம்பவத்துக்குப் பிறகும் நான் திரு.பி.வரதராஜனின் ஆட்களால் மறைமுகமாக மிரட்டப்பட்டேன்.என்னைத் தாக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தினார்கள்.
தற்பொழுது குமுதம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள்,ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,திரு.பி.வரதராஜனை குமுதம் குழுமத்தின் நிர்வாக மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்.அது போல எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவையும் தற்போதைய நிர்வாக மேலாளர் என்ற அடிப்படையில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள் ரத்து செய்து விட்டார்.
இதையடுத்து நான் மீண்டும் எனது பணியைத் தொடர கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை 9.45 மணியளவில் குமுதம் அலுவலகத்துக்குச் சென்றேன்.
அப்போது ரவுடிகள் போல காட்சியளித்த சிலர் என்னை நுழைவாயிலில் வழிமறித்து என்னை உள்ளே போகவிடாமல் தடுத்தனர்.என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளே நுழைந்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டினர்.என்னால் உள்ளே செல்ல முடியவில்லை.
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறையினர் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து என்னை குமுதம் அலுவலகத்துக்குள் நுழைய விடுமாறும்,எனது பணியைத் தொடர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் திரு.பி.வரதராஜனால் எனக்கும்,என் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.அப்படி எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு திரு.பி.வரதராஜனே முழுப் பொறுப்பு ஆவார்.
திரு.பி.வரதராஜன் மற்றும் அவரது ஆட்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
தங்களின் உண்மையுள்ள,
பி.ஜி.சாய்குமார்.
 இவரது புகாரின் படி காவல்துறை பி.வரதராஜனை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.

No comments: