Wednesday, 20 August 2014

பெண் செய்தி வாசிப்பாளர்களை இழிவு படுத்தும் மஞ்சள் நக்கீரன்..!நக்கீரன் இப்பொழுது புதுப்பொலிவுடன் வெளிவருகிறதாம். ஊரெங்கும் சுவரொட்டி ஒட்டி விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.விலையோ.ரூ.15.

புதுப்பொலிவு என்று சொல்லிக் கொண்டாலும் பழைய சரக்குத் தான்.
வழக்கம் போலத்தான். புதிய பகுதிகள் என்று 4 பகுதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.கோபிநாத் எழுதும் தொடர் தவிர்த்து மீதமுள்ள மூன்று தொடர்களும் கிசுகிசுக்கள் மற்றும் பாலியல் தொடர்புடையவை தான். நக்கீரனின் குணமும் மணமும் மாறி விடுமா என்ன..?

அதில் வந்த செய்தி;விசாரித்த உண்மை என்ற ஒரு பகுதி.

இதன் தலைப்பும் செய்தி உள்ளடக்கமும் இதற்கு முன்பு மஞ்சள் பத்திரிகைகளிலும்,சில சினிமா பத்திரிகைகளிலும்,நாலாந்தர பத்திரிகைகள் ஒரு சிலவற்றிலும் வந்தவை தான்.அதை இப்பொழுது நக்கீரனும் பின்பற்றுகிறது.

இந்தப் பகுதி மூன்று இதழ்கள் இதுவரை வந்துள்ளது.இதில் இருந்து இரண்டு பதிவுகளை எடுத்துக் காட்டுகிறோம்.

ஆகஸ்டு 09-12 ஆம் தேதியிட்ட இதழில் வந்த பதிவு இது. ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவன்யூவில் இருந்து நள்ளிரவு ஒரு பெண்மணி நிர்வாணத்துடன் ஓடியதாக பதிவு.
இந்தச் செய்தியில் உள்ள  உண்மைத்தன்மையை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.

அடுத்து  2014 ஆகஸ்டு 16-19 தேதியிட்ட கடந்த இதழில் வந்த ஒரு பதிவு.இதிலிருந்து நக்கீரன் உண்மை என்று ஒப்புக்கொள்வது என்னவென்றால் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் மூவர் பாலியல் தொழில் செய்யும் பொழுது சிக்கி விட்டார்கள். அவர்களை காவல்துறை கோ-ஆபரேட் செய்ய வேண்டும் என்று சொல்லியது. இன்னொன்று இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பிற செய்தி வாசிப்பாளர்களை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் அவர்களையும் கோ-ஆபரேட் செய்யச் சொல்ல வேண்டும் என்பது.( பாலியல் தொழில் செய்து பிடிபடும் பெண்களிடம் காவல்துறை விரும்பும் 'கோ-ஆபரேட்' என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.)

மஞ்சள் பத்திரிகையை நகல் எடுத்தது போல் எழுதியுள்ளது நக்கீரன்.இதற்கு மேல் கேவலமாகவும் இழிவாகவும் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழ்நாட்டில் அதிகபட்சம் 10 செய்தி சேனல்கள் இருக்கிறது.மொத்தம் 50 நபர்கள் செய்தி வாசிக்கலாம். இதில் பெண்கள் 30 பேர் இருக்கலாம். நக்கீரன் 3 பேர் பிடிபட்டார்கள் என்கிறது.இன்னும் இதில் சம்பந்தப்பட்டவர்களை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதாய் எழுதுகிறது.

''வந்த செய்தி- விசாரித்த உண்மை'' என்று நக்கீரன் இரு பகுதியாக எழுதுகிறது.

வந்த செய்தி- விசாரித்த உண்மை என நக்கீரனின் இரண்டு பகுதிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ? இரண்டுமே ஒன்று போல அடிப்படை ஆதாரமற்றதாகதாகவும் கட்டுக்கதையாகவும் தானே இருக்கிறது.

 பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்பது விசாரித்த உண்மை என்றால்அதை நிருபிக்க என்ன தரவுகளை நக்கீரன் வைத்துள்ளது..? எந்த நாளில்,எங்கு பிடிபட்டார்கள்..? எந்த டீம் பிடித்தது..? அவர்கள் பெயர் என்ன..?அந்த பெண்கள் எந்த தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறார்கள்..? எந்த ஆதாரத்தை நக்கிப் பிழைக்கும் நக்கீரன் வைத்துக்கொண்டு இதனை உண்மை என்று சான்றிதழ் அளிக்கிறது..?

எங்கோ ஒரு நகராட்சியில் ஏதோ ஒரு கவுன்சிலர் லஞ்சத்தில் மஞ்சம் குளிக்கிறார் என்பன போன்ற கிசுகிசு அல்ல இது .இதை போகிற போக்கில் படித்து விட்டு அலட்சியப்படுத்தி விட்டுச் செல்ல முடியாது. தன் துறையில் உள்ள பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவு படுத்தும் செய்தி இது. இதை அறிய நெற்றிக்கண் தேவை இல்லை.

தனது துறை பணியாளர்கள் குறித்தே இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற,மிக கேவலமான செய்தியை 'துணிந்து' வெளியிடும் நக்கீரனிடம் நாம் அதன் பிற‌ செய்திகளில் உண்மையும் நேர்மையும் இருக்க முடியும் என்பதை நம்ப முடியுமா என்ன..?

****

ஒப்பீட்டளவில் இதைப் போன்ற செய்தியை ( நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்,அவர்களின் விலை என்ன..?) முன்பு கேவலமாய் செய்தி வெளியிட்டமைக்காக  நடிக,நடிகைகள் போராடினார்கள். அதைத் தொடர்ந்து தினமலர் சென்னைப் பதிப்பின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். நடிக,நடிகைகளிடம் இந்த விஷயத்திலாவது இருக்கும் ஒற்றுமையை நாம் ஊடகவியலாளர்களிடம் எதிர்பார்க்க முடியாதது தான்.தினமலர் நாளிதழ் அதன் பிறகு வருத்தம் தெரிவித்தது.பெண் எழுத்தாளர்கள் ஊடக பலத்தில் தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று ஜெயமோகன் சொன்னமைக்காய் மும்பையில் வாழும் எழுத்தாளர் சி.எஸ்.லட்சுமியில் இருந்து முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட்டவர்கள் வரை எத்தனையோ பெண்கள் போராளியாய் அவதாரம் எடுத்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் ராஜா,செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்பும், ராஜாவைக் கண்டித்தால் தங்களின் 'கருத்தாளர்,மற்றும் சமூக ஆர்வலர் அடைமொழிக்குப் பங்கம் வந்துவிடும் என்று இணையத்தில்,தொலைக்காட்சியில் தினமும் கருத்துச் சொல்ல அவதரிக்கும் போராளிகள் முதல் தொழில் பத்திரிகையாளர்கள்,சங்கங்கள் வரை எல்லோரும் கள்ள மவுனம் காத்தார்கள்.

கடைசிவரை பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை.பெண் பத்திரிகையாளர்கள் சங்கமான NWMI என்ற பெயரில் கண்டன அறிக்கை வெளியான‌து. அந்த அமைப்புக்கு தமிழ்நாட்டில் பிரதிநிதிகளோ அமைப்போ இல்லை என்பது குறிப்பிட‌த்தக்கது. அத்துடன் அது முற்றுப் பெற்றது யாரும் அது குறித்து அதன்பிறகு பேசவில்லை.

அது தான் இப்பொழுதும் நடக்கும் என்பது நமக்குத் தெரியும்.

இந்தச் செய்தி வெளியாகி ஐந்து நாட்களாகியும் எந்த எதிர்வினையும் இல்லை. குறைந்த பட்சக் கண்டனம் தெரிவிக்க கூட ஆட்கள் இல்லை.

இதுவரை மட்டுமல்ல,இன்னும் எத்தனை மாமாங்கம் ஆனாலும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் பாலியல் ரெய்டில் சிக்கினார்கள் என்ற நக்கீரனின் இழிவான செய்திக்கு,  பத்திரிகையாளர்கள்,மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள்,பெண் பத்திரிகையாளர்கள், அக்மார்க் பெண் போராளிகள், இணையத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் செயல்படும் மனித உரிமை ஆர்வலர்கள்,கருத்துப் போராளிகள்,நக்கீரனில் 'எதிர்க்குரல்' என்ற பெயரில் வருடக்கணக்கில் பத்தி எழுதிய‌தோடு மட்டுமல்லாமல்,இன்று தினமும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் பல பிரச்சனைகளில் தனது கருத்தைச் சொல்லும் மனுஷ்யபுத்திரன் வரை யாரும் எந்த எதிர்வினையும் காத்திரமாகவும் உண்மையாகவும் ஆற்ற மாட்டார்கள் என்பது நமக்கு நன்கு தெரியும்.

சன் குழுமத்தை விட‌ நக்கீரன் வலிமை குறைந்த ஊடகம் என்பதால் குறைந்த பட்ச எதிர்ப்பு முணுமுணுப்பு இருக்கலாம்.

ஆனால் நாம் நமது எதிர்வினையை ஆற்றாமல் இருக்க முடியாது.

வந்த செய்தி-நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பது தொடர்ந்து நிருபணமாகிக் கொண்டே இருக்கிற‌தாமே..? உண்மையா..?

விசாரித்த உண்மை-ஆம்.நக்கீரன் மஞ்சள் பத்திரிகை என்பதில் இருந்து எப்பொழுதும் பின்வாங்குவது இல்லை.அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு கடந்த இதழில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் குறித்து எழுதிய அவதூறு தான். நக்கீரன் தனது தொழிலை தொடர்ந்து செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வாழ்க பத்திரிகை 'ஜனநாயகம்'.


Friday, 8 August 2014

பொய்மையின் புகலிடம் தினமலர்...!பொதுமக்கள் எதிர்பார்ப்பு,கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர்,நம்பகமான வட்டாரங்கள் கூறின,விரைவில் நடவடிக்கை உறுதி, பின்னணி காரணம்,கிசுகிசுத்தனர்,புலனாய்வில் கிடைத்த தகவல் என்பன போன்றவைகள் எல்லாம் எப்பொழுதும்  பொய்யையும் புரட்டையும் வெளியிட்டு தான்தோன்றித்தனமாய் எவ்விதப் பொறுப்புமற்றும் உள்நோக்கத்துடனும்,ஆர்வத்துடனும் வெளியிடும் பக்கங்களை நிரப்பும் பழக்கம் 'புலனாய்வு' இதழ்கள் செய்பவை. இவர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் அத்தி பூத்தாற் போல் நடந்தால் அதற்காய் தங்களுக்குத் தாங்களே தற்பெருமை கொள்ளும் இவர்கள் சொன்னது நடக்க வில்லை என்றால் எவ்வித மறுப்போ வருத்தமோ தெரிவிக்காமல் கடந்து செல்வார்கள்.

'புலனாய்வு' என்று சொல்லிக் கொள்ளும் இதழ்களின் இந்தக் கேடுகெட்ட குணாம்சம் தினசரி இதழிலும் உண்டு.

அதிலும் மற்ற‌ நாளிதழ்களை விட டி.வி.ராமசுப்பையரின் மகன்களும் பேரன்களும் நடத்தும் தினமலரில் ம‌லிந்து காணப்ப‌டும். தங்களின் சொத்துப்பிரச்சனையில் ஐந்து முதலாளிகளும் பத்துப் பதிப்புகள தொடர்பாக ஒற்றுமை இல்லாமல்  நீதிமன்றப் படியேறி தீர்வை  நோக்கிக் காத்திருந்தாலும்  இந்த விஷயத்தில் மட்டும் இவர்களின் அனைத்துப் பதிப்புகளிலும் ஒற்றுமை உண்டு.

தினமலரின் 'புலனாய்வு' தரத்திற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான் இந்தப் பதிவு.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி. .திமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் பெ.வீ.கல்யாணசுந்தரம் ராஜினாமாவுக்கு அவருக்கும்,அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமாருக்கும் ஏற்பட்ட‌ பிரச்சனை தான் காரணம் என கட்சி வட்டாரங்கள் சொன்னதாய் அதன் நிருபர் வார்த்தைகளை வளைத்து வளைத்து எழுதியிருக்கிறார்.

ஆனால் மறுநாள்  (07-08-2014) அன்று காலை 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளிதழில் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்ன காரண‌த்துக்காய் ராஜினாமா என்று அனைத்துக் காரணங்களையும் எழுதியிருந்தனர்.அதே நாள் மதியம் பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதிய கடிதமே அனைத்து  ஊடகக்காரர்களிடமும் கிடைத்தது.அதில் தனது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று எழுதியிருக்கிறார்.அதில் ஒரு வரி கூட தினமலர் புலனாய்வு நிருபர் சொன்ன படி அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் குறித்து எழுதவில்லை.ஆக முதலில் தினமல்ர் எழுதிய 'செய்தி' வழக்கமான கட்டுக்க‌தை என்று தெரிகிறது. 30-07-2014 தேதியிட்ட ராஜினாமா குறித்து ஐந்து நாட்கள் கழித்த பின்னும் ஒழுங்காய் துப்பறியத் தெரியாத துப்புக் கெட்ட தினமலர் மறுநாள் ஆங்கில இதழில் காரணங்களை எழுதிய  பின்பு, ராஜினாமாவின்  நகல் அனைவருக்கும் கிடைத்த பின் கல்யாணசுந்தரத்தின் பேட்டி என்ற ஒன்றை வாங்கி வெளியிடுகிறது. ஆனால் தவறான செய்திக்கு ஒரு மறுப்பும் இல்லை.

இது 06-08-2014 அன்று தினமலர் சென்னைப் பதிப்பில் வந்த செய்தி.தான் தவறாய் வெளியிட்ட செய்தியை மறைக்க கல்யாணசுந்தரத்தின் பேட்டியை வெளியிட்டு மறைக்கப் பார்க்கிறது என எண்ணலாம்.ஆனாலும் கற்பனைக் கதை எழுதும் புத்தியை அவ்வளவு எளிதில் விட முடியுமா..?கல்யாணசுந்தரத்தின் பேட்டிக்கு இடப்புறமே இன்னொரு செய்தியில் கல்யாணசுந்தரத்தின் ராஜினாமாவுக்கு அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நடந்த பிரச்சனை தான் காரனம் என்று திரும்பவும் பழைய கட்டுக்கதையை எழுதி வெளியிட்டுள்ளது. ஒருவேளை அதுவும் ஒரு காரணம் என்று தினமலர் கருதும் பட்சத்தில் அது குறித்து ஒரு கேள்வியை கேட்டு கல்யாணசுந்தரத்திடம் இருந்து பதிலை வாங்கிப் போட வேண்டியது தானே..?

இதிலிருந்து ஒரு உண்மை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இப்படி எழுதும் நிருபர்க‌ள் யாரும் எங்கும் களத்தில் இறங்கி செய்தி சேகரிப்பதும் கிடையாது. உண்மையை மட்டுமே வெளியிட வேண்டுமென்று எண்ணுவதும் கிடையாது.அதனை அறிய மெனக்கெடுவதும் கிடையாது. பக்க‌த்தை நிரப்ப அமர்ந்த இடத்தில் இருந்த படி எதையாவது எழுதி வெளியிடுவது தான் இவ‌ர்கள் நிறமும் குணமும்.

இதில் உண்மையின் உரைகல் எனத் தலைப்பு வேறு.தினமலர் பொய்மையின் புகலிடம் என்பது தான் சரி. 

Wednesday, 30 July 2014

தினத்தந்தி- பப்ளிசிட்டிக்கு பல்லிளிக்கும் சத்யராஜ்; காசுக்கு குரைக்கும் நிருபர்...!
Paid news  க்கு   இந்தச் செய்தி ஒரு எடுத்துக்காட்டு.

http://www.dailythanthi.com/News/Districts/2014/07/30034016/Mavulivakkam-Building-crash-SurvivorStreet-dog-SathyarajSibiraj.vpfஇந்தச் செய்தி இன்றைய 'தினத்தந்தி'யில் சென்னைப் பதிப்பில்  (30-07-2014)சென்னை மாநகரச் செய்திகள் பகுதியில் மொத்தம் 259 வார்த்தைகளுடனும் ஒரு புகைப்படத்துடனும் வெளிவந்துள்ளது. மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட  ஒரு தெரு நாயை திரைப்பட  நடிகர் சத்யராஜும் அவரது மகனும் நடிகருமாகிய சிபிராஜும்  தத்து (!) எடுத்தது குறித்து பதிவு.

தன் கவனத்திற்கு வந்தவுடன் கேவலமான பார்வையுடன் நிருபரால் தவிர்த்திருக்கப் பட வேண்டிய  இச்செய்தி, விரிவாகவும் முக்கியத்துவத்துடனும் சுவராசியத்துடன்(!) வெளிவந்திருக்கிறது.அதற்கு  என்ன 'முக்கியத்துவம் அல்லது தகுதி' இருக்கிறது என்று பார்த்தால் எதுவும் இல்லை.

இந்தச் செய்தியிலேயே குறிப்பிட்டது போல, மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 62 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.30 க்கும் மேற்பட்ட நபர்கள் நடைப்பிணமாய் வாழ்ந்து வருகின்றனர்.அநியாயமாய்ச் செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கோ அல்லது நடைபிணமாய் உயிர் வாழ்பவர்கள்  நல்வாழ்வுக்கோ துரும்பைக்கூட அசைக்காத நடிகரும் அவர் பிள்ளையும்   கூச்சமில்லாமல் ஒரு நாயைத் தத்து எடுத்ததாக நிருபரையும் புகைப்படக்காரரையும் முன்கூட்டியே வரச் சொல்லி பரிவாரங்களுடன் பல்லை இளித்துக்  கொண்டு போஸ் கொடுக்கின்றனர்.பப்ளிசிட்டிக்கு அலையும் வெறிபிடித்த மனித ஜென்மங்களிடம் மாட்டிக்கொண்ட   அந்த தெரு நாய் தான் புகைப்படத்தில் பரிதாபமாய் காட்சி அளிக்கிறது. 

அந்த நாய் மற்றும் காக்கா  எவ்வாறு பாதிக்கப்பட்டது ? யார் அதனை மீட்டெடுத்தது ? எப்படிச் சிகிச்சை அளிக்கப்பட்டது என அதற்கு ஒரு பின்னணி.
அதன்பின் பேட்டி வேறு.எல்லோரும் பல்லை இளித்த படி முகரையை காட்டிக் கொண்டு நிற்கின்றனர்.கூச்சமில்லாமல் அதனைத் 'தினத்தந்தி' வெளியிடுகிறது.
*நடிகர் சிபிராஜ் “மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்த நாய் பற்றி எனது நண்பர் கூறினார். இதையடுத்து உயிர் பிழைத்த லாசி என்ற நாயை நான் தத்து எடுத்துக்கொண்டேன்...//ஏன் செத்துப் போனவர்கள் குறித்து எந்த நண்பரும் சிபிராஜின்  செவிட்டுக் காதுகளுக்கும் குருட்டுக் கண்களுக்கும்  சொல்லவில்லையா..?

எங்கள் வீட்டில் ஏற்கனவே வெளிநாட்டு நாய்கள் உள்ளன. அதோடு இந்த தெரு நாயையும் வளர்க்க முடிவு செய்து இருக்கிறோம்.’’/ வீட்டில் மனிதர்கள் யாரும் இல்லையா..? இல்லை சத்யராஜூம் அவரது குடும்பமும்  மனிதப்பிறவியில் சேர்த்தி இல்லையா..? ஒரு மனிதனை தத்து எடுத்திருக்கலாமே..?
நடிகர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான நாய்களை வாங்குவதை விட, வீதி நாய்களை தத்து எடுக்க முன்வர வேண்டும்” என்றார்.வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாயை வளர்க்கும் சத்யராஜ்  இதைச் சொல்கிறார்.

செத்துப் போனவர்களை இழிவு படுத்தும் விதமாகவும் வாசகனை மடையனாக எண்ணியும் இந்தச் செய்திப்பதிவு  இருக்கிறது.

இத்தனைக்கும் தினத்தந்தியின் வர்த்தக கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது பிரசுரிக்கத் 'தகுதி' இல்லாத செய்தி தான். இது மிகப்பெரிய நடிகையோ உச்ச நட்சத்திரமோ தொடர்புடைய செய்தி இல்லை .சத்யராஜும் சிபிராஜும் இரண்டாம்  நிலையில் இருந்து  மார்க்கெட் இழந்த நடிகர்கள்.

சென்னையில் மட்டும் 4.5 லட்சம் பிரதிகள் 'தினத்தந்தி' விற்பனை ஆகிறது.(புறநகர் பதிப்பில் இச்செய்தி வெளியிடப்பவில்லை என்றாலும் 3 லட்சம் பிரதிகளில்  இச்செய்தி வெளிவந்திருக்கிறது.) பெங்களூர் பதிப்பிலும் வெளிவந்துள்ளது.அங்கு ஏறத்தாழ 60 ஆயிரம் பிரதிகள் விற்பனை  ஆகிறது.
  இச் செய்தியையோ அல்லது திரைப்படம் குறித்தோ   மேற்கண்ட பதிப்புகளில் விளம்பரமாய் வெளியிட்டால் கட்டணம்  லட்சங்களில்  கொடுக்க வேண்டும்.ஆனால் அதற்குப் பதிலாய் அதிக வாசகர்களை அதிக வீச்சில் இச்செய்தி போய்ச் சேர்ந்துள்ளது. வெளிவரும் படத்திற்கும் மார்க்கெட் இழந்த நடிகர்களுக்கும் நல்ல பப்ளிசிட்டி.பப்ளிசிட்டி தேடுவதற்கும் அதனை நாளிதழில் வர வைப்பதற்கும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.அதை விடுத்து மவுலிவாக்கம் பரிதாபத்தில் அதைச் செய்தது கேவலமாய் இருக்கிறது.

நிருபருக்கு சில ஆயிரங்கள் கொட்டிக் கொடுக்காமல் திட்டமிட்ட இந்த செய்தி வெளிவர துளியும் வாய்ப்பு  இல்லை.

நாயை நடிகர்கள் தத்து எடுக்க வந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அவர் களை பாராட்டி சென்றனர்.// பொதுமக்கள் சொன்னதாக  நிருபர் எழுதிய கடைசி  வாக்கியம்.

இதனைப்படிக்கும் அனைவரும்  எழுதிய நிருபரைக் காறித் துப்பியதை  அவருக்கு யார் சொல்லுவது..?

Sunday, 27 July 2014

நியூஸ் சைரன்-தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது யார்..?த்திரிக்கை ஆரம்பிப்பதே நாதியற்ற பத்திரிகையாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்ற கேள்வி 'நியூஸ் சைரன்' வார  இதழுக்கு பொருந்தும். தொடங்கப்பட்ட போது ஏகப்பட்ட புரளியை கிளப்பிக்கொண்டு தொடங்கப்பட்ட இதழ் இது.

 அதாவது  இதன் முதலாளிகள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள். பெரிய அளவில் டி.வி. சேனலையும் சேர்த்து தொடங்க இருக்கிறார்கள். முன்னோட்டமாக அச்சு ஊடகத்தில் கால் பதிக்கிறார்கள் என்ற பில்டப். ஆனால் கடைசி கட்டம் வரையிலும் உண்மையான முதலாளி யார் என்பதை ரகசியமாகவே வைத்திருந்ததுதான் வேடிக்கை.

சரி விஷயத்திற்கு வருவோம்.
இந்த வார இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்ட எஸ் சரவணக்குமார் இதழில் ஒரு இயக்குனர். அதாவது இவர் பத்திரிக்கையாளர் நிலையைத் தாண்டி முதலாளி ஆகி விட்டார்.பண பரிவர்த்தனையில் கையொப்பமிடும் அதிகாரமும் பெற்றவராக இருந்தார். இந்த இதழின் வெளியீட்டாளரும் சரவணகுமார் தான். 

எஸ் சரவணகுமார் யாரென்றால் இதற்கு முன் ஜூனியர் விகடனில் கோலோச்சியவர்.அதன் பின் அங்கிருந்து விரட்டப்பட்டு சரத்குமார் நடத்திய மீடியா வாய்ஸில் தஞ்சம் புகுந்தவர்.இவரைப்பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். (இணைப்பு) 


அதே போன்று ‘வெளிநாட்டு தமிழர்கள்’ சார்பில் சுந்தர் என்பவரும் இயக்குனராய் இருந்தார்.இவருக்குப் பல்வேறு தொழில்கள்.ராவ் முக்கிய பதவியில் இருந்தார். குமுதத்தில் இருந்த பா..ஏகலைவன், ரவிஷங்கர் இருவரும் பொறுப்பாசிரியர்கள். பத்திரிகை ஒழுங்காய் வெளிவந்தது.

 ஆனால் ஊழியர்களுக்கான சம்பளமே என்றுமே ஒழுங்காய் வரவில்லை. முதல் மாதமே பத்தாம் தேதி தான் சம்பளம் . அடுத்த மாதம் 15-ம் தேதியை தாண்டியது. ராவ் மட்டும் இதுகுறித்து நிர்வாகத்திடம் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் எதிர்ப்போ என்னவோ 3-வது மாத சம்பளம் வரவே இல்லை  அதன் பிறகு ராவ் எதுபேசினாலும் நிர்வாகம் கேட்கவில்லை. சரவணகுமார் தான் நமக்கு சரியான சாய்ஸ் என அவரை முன்னிலைப்படுத்தி பேசியது. சரவணகுமாரும் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையுமாக நடந்து கொண்டார் .

 கொஞ்ச நாளில் ஒருவர் பின் ஒருவராக எடிட்டோரியலில் இருந்த அனைவரையும் வெளி அனுப்பி விட்டார்கள். பிரிலான்ஸ் நிருபர்களை வைத்து இதழை நடத்தி விடலாம் என்று சரவணகுமார் திட்டம். அதன் பிறகும்  சம்பளத்தை கொடுத்தார்களா என்றால் கிடையாது தொடர்ந்து வேலை பார்த்தவர்கள்,வெளியேற்றப்பட்டவர்கள் என கேட்டவருக்கு எல்லாம் காசோலை கொடுத்தார்கள்.ஆனால் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அனைவருக்கும் இரண்டு, மூன்று மாத சம்பளப்பணம் பாக்கி.  சரவணக்குமார் தினமும் ஒரு காரணம் சொன்னார்.
சரவணக்குமார் 


இது சரிப்படாது என முடிவு செய்து முதலில் அங்கிருந்து ராவ் விலகினார். ஒழுங்க்காய்ச் சம்பளம் தராததால் முதலில் பொறுப்பாசிரியர்  ரவிஷங்கர் விலகினார்.அதன் பின் சிறிது காலத்தில் இன்னொரு பொறுப்பாசிரியர்   பா.ஏகலைவனும் விலகிக்கொண்டார்.

இந்த கட்டத்தில்தான் சைரனின் மர்ம முதலாளி செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன் என்று தெரியவருகிறது. அந்த ஆளுக்கு பணத்திற்கு என்ன பஞ்சம்..? ஊரை அடித்து உலக வங்கியில் போட்டு வைத்திருப்பவராயிற்றே என்று பலரும் புலம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் அவரோ பத்திரிக்கை விற்ற காசை வசூல் செய்து சம்பளம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு புட்பால் பார்க்க பிரேசில் போய் விட்டதாக சரவணகுமார் சொன்னார் . பத்திரிகை விற்ற காசில் சம்பளம் என்பது நடக்கும் கதையா..?

அனைவரும் போலிசுக்கு போவதாய் சத்தம் போட்டவுடன், சரவணகுமார் முதலாளி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் செட்டில் செய்யப்படும் எனப் புதுத் தகவல் சொன்னார்.

 ஆனால் எங்கிருந்து தான் பணம் வந்ததோ தெரியாது.நான்கு நாட்கள் கழித்து வந்து கொடுத்தார்கள். அனைவருக்கும் ஒருமாத சம்பளத்தை  செட்டில் செய்தார். ராஜவிபீஷிகாவுக் சுத்தமாக தரவேயில்லை. ஜெரோமிற்கு ஒரு மாத சம்பளம் பாக்கி. ராவ் அவர்களுக்கு 3 மாதம் இல்லை.ஏகலைவன், ஷாலினி,மகேஷ், ஸ்ரீதர், லே அவுட் டிசைனர் சுரேஷ், ஆகியோருக்கு இரண்டு மாத சம்பளம் தரவேயில்லை. கேட்டால் முதலாளி  இவ்வளவு தொகையைதான் கொடுத்தார். இதற்கு மேல் கிடையாது என்ற பதிலை சரவணகுமார் கூறினார்.
 மூத்த பத்திரிகையாளர் ’ஆந்தை குமார் அவரும் நீயுஸ் சைரன் வார இதழில் ஒரு மாதம் வேலை பார்த்தார். அவருக்கு டிமிக்கி கொடுக்க அதுவும் பெரும் பஞ்சாயத்தாகி முடிந்தது.மதன் எழுதிய தொடருக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரும் நிறுத்தி விட்டார்.சாரு நிவேதிதா தொடருக்கு  பணம் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.

 உண்மையில் 'செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன்'  எவ்வளவு கொடுத்தார். சரவணகுமார் எவ்வளவு எடுத்தார் ?என்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது. ஒரு வேலை பினாமியாக நியமிக்கப்பட்டிருந்த சுந்தர் தரப்பில் ஏதாவது கைவரிசை காட்டப்பட்டதா ? என்பதும் தெரியவில்லை. ஆனால் அனைத்துக்கும் ஆதார மைய மர்மமாக இருப்பது சரவணகுமார்தான் என்கிறது ஒரு தரப்பு.

அதற்கு ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள்.

 சீமோன் என்பவரை தொடக்கத்திலேயே எச்.ஆர் ராக நியமித்தார் சரவணகுமார். இவர் சரத்குமார் கட்சியில் இளைஞர் அணியில் இருப்பவராம். சீமோன். நிர்வாகத்தை நம்பி கணினி உட்பட பலதையும் அவர் வாங்கி போட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த எச்.ஆர் சீமோனை வேலையை விட்டு நீக்கி விட்டார் சரவணகுமார். அவருக்கு இரண்டு மாத சம்பளம் மேலும் அவரது உதவி நிர்வாகியாக இருந்த இரண்டு நபர்களுக்கும் பாக்கி. கேட்டு கேட்டு அலைந்து பார்த்துவிட்டு நடிகர் சரத்குமாரிடம் போய் நின்றார் சீமோன். அவர் காவல்துறை  உயர்மட்டத்தில்  பேசினார். வழக்கு பதிவு போடாமலேயே சரவணகுமாராய்  வீடு தேடிபோய் இழுத்துவர முனைந்தார்கள். அவர் தப்பித்து  முன்ஜாமின் போட்டார். அது கிடைக்காமல் போனது. கடைசியல் சமரச பேச்சு உடன் பட்டார்.

நியூஸ் சைரன் இதழை வெளியிட்ட மதன்.இவருக்கே பணம் தராமல் நாமம் சாத்தியவர்கள் எம்மாம் பெரிய கில்லாடிகள்..?அப்பொழுது சீமோன், நடந்தது இதுதான் என பக்கம் பக்கமாக ஆதாரத்தை முன்வைத்து ‘சரவணகுமார் நம்பகமான ஆள் இல்லை. பலவற்றிலும் கை வைக்கிறார். சுருட்டுகிறார். ஒரு நாளைக்கு உண்மையான முதலாளி கவலைப்படுவார் என்று கூறினார். பதிலுக்கு எதுவுமே பேசாத சரவணகுமார் எச்.ஆர் சீமோனுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் கொடுத்துதான் மீண்டார்.  இந்த விஷயத்தில் நிர்வாகம் சரவணகுமாருக்காக முன்வந்து எந்த உதவியும் செய்யவில்லை. அவராகவே தான் இதிலிருந்து எனில் ஊழியர்கள் சம்பள பிரச்சனையில் என்ன நடந்திருக்கும் என்பதும் அனைவராலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

கோட் அணிந்து இருப்பவர் தான் சீமோன் இடது ஓரம் திருவாளர் சரவணகுமார் 


செட்டி நாட்டு முதலாளி பணம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ?

அல்லது சரவணகுமார் வாங்கிய பணத்தில் சரியாக கணக்கு காட்டாமல் முதலாளியையும் தொழிலாளியையும் ஒருங்கே  ஏமாற்றினாரா என்பதுதான் வியப்பான கேள்வியாகி நிற்கிறது.எது உண்மையோ தெரியவில்லை.நட்டாற்றில் நிற்பது உயர்பதவி வகித்த ராவ் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் தான்.சென்னை மட்டுமல்ல வெளியூர் நிருபர்கள் யாருக்கும் கூட சம்பளமோ இதர சலுகைகளோ தரவில்லை. சம்பளப்பாக்கியே சில லட்சங்கள் இருக்கிறது.
இப்பொழுது இதழும் வரவில்லை.நிறுத்தி விட்டார்கள்.

நாட்டைச் சுருட்டும் ஊழல் பேர்வழிகள் ,அவர்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர்கள்  எல்லாம் பத்திரிகை தொழிலுக்கு வந்தால் இப்படித்தான் முடியும் போல் இருக்கிறது.


தொழிலாளர்களுக்கு என்று விடியும்..?
Monday, 21 July 2014

வினை விதைத்த மு.க.ஸ்டாலின் ;அறுவடை செய்த உதயநிதி..!


குமுதம் நிறுவனத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக எழுந்த பஞ்சாயத்தில் குமுதம் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் இயக்குனர் வரதராஜனுக்கும் நடந்த மோதல் தொடர்பாகவும் அதில் நீதிக்குப் புறம்பாக வரதராஜனுக்கு அப்பொழுதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி செய்ததனால் வரதராஜன் தப்பித்து விட்டது குறித்தும் ஒரு பதிவினை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

அந்தப்பதிவிலியே கருணாநிதி மீது கடும் வன்மத்துடன் செய்தி வெளியிடும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பதையும் எழுதி இது எத்தனை நாளைக்கு என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தோம். யாரையும் பயன்படுத்தி தூக்கி எறியும் குணம் கொண்ட வரதராஜன் ஸ்டாலினுக்கும் அதைச் செய்ய நீண்ட நாள் ஆகாது என்பது தெரிந்ததனால் தான் அதை எழுதினோம்.அதற்கு இப்பொழுது விடை கிடைத்துள்ளது.

'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன் தன் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்.
இது போன வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படக் கட்டுரை. மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கும்,நடிகை ஒருவருக்கும் 'காதல்' (!)என்றும் அதன் எதிரொலியாய் உதயநிதி தற்கொலை முயற்சி என்றும் செய்தி.இதன் நம்ப‌கத்தன்மை குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை.அது உண்மையோ பொய்யோ அது குறித்தும் இப்பொழுது பேசப்பட வேண்டிய அவசியமில்லை.

( இந்த உதயநிதி தான் தி.மு.க. கட்சிப் பத்திரிகையான‌ முரசொலி நாளிதழின் பொறுப்பு நிர்வாகி என்பதும் அவருக்கு மாதமாதம் லட்சத்தில் சம்பளம் என்பதும் உபரித்தகவல்.அவர் முரசொலியை கண்ணிலாவது பார்ப்பாரா என்பதும் சந்தேகமே..)

ஆனால் இப்பொழுது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும், எதைச் செய்தாலாவது ஆளுங்கட்சியின் ஆசிர்வாதத்தை பெற்றுவிடத் துடிக்கும் வரதராஜன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை தான் விமர்சிக்காமல் இருந்த மு.க.ஸ்டாலின் குடும்பத்தையும் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதை அறியலாம். இது நாம் ஏற்கனவே அறிந்தது தான்.
---

மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு அரசியல் சூத்திரமே இன்னும் புரிபடாது இருக்கும் பொழுது பத்திரிகைத்துறை அரிச்சுவடி பற்றி இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் எதுவும் புரியாது.

குமுதம் பிரச்சனை என்னவென்று அறியாமல்,எவனோ ஒரு அரசியல் புரோக்கர் ஒரு பிரச்சனையைக் கொண்டு வந்தவுடன் எதையும் விசாரிக்காமல் அந்தப்பிரச்சனையில் ஒருதரப்பு ஆதரவு என்பதில் வெளிப்படுவது சுயநலம் மட்டுமல்ல,திறமையின்மையும் கூடத்தான்.

குமுதம் பிரச்சனையில் தலையிட்ட பின்பு  அதற்கான பிரதிபலன்களில் ஒன்றாக‌ தனது மனைவியை எழுத வைத்து 'தளபதியும் நானும்' என்னும் தொடரை குமுதம் சிநேகிதியில் வெளியிட வைத்து புளகாங்கிதம் அடைந்தார்.நான்கு மாதங்களுக்கு மேல் வெளியிடத் தகுதி இல்லாத அத் தொடரும் நான்கு வருடங்களுக்கும் மேலாக இன்னும் சவ்வாக இழுக்கடிக்கப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர்,கருணாநிதியையும் குஷ்பூவையும் இணைத்து அட்டைப்படக் கட்டுரையை வெளியிட வைத்து மகிழ்ச்சிப் பட்டுக் கொண்டனர். இன்றோ அதே குமுதம் ரிப்போர்ட்டரில்,நடிகையை இணைத்து அவரது பிள்ளைக்கு கவர் ஸ்டோரி.  அடுத்து ஸ்டாலின் குடும்பத்தில் யாருக்கு என்று காத்திருப்போம்.

(இந்த கவர் ஸ்டோரியில் ஸ்டாலின் குடும்பத்து உள்குத்து எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதே நேரம் மகனைப் பற்றி இழிவு படுத்தி கவர்ஸ்டோரி வெளியிட்ட பத்திரிகை குழுமத்தில் அம்மா துர்கா ஸ்டாலின் தனது தொடரை முழு மூச்சுடன் தொடர்கிறார். நல்ல குடும்பமய்யா..)

எப்படியானாலும் மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு இது தேவை தான்.
---

இன்னொரு புறத்தில் இது குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன் போன்றவர்களின் சுயரூபத்தைக் காட்டுவதாய் எடுத்துக் கொள்ள‌லாம்.தன்னைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செலல்வும்,திரும்ப அதற்கு எதிர் நிலை எடுக்கவும் தயாராவார் என்பதற்கு இது நல்ல உதாரண‌ம்.

நேற்று த‌னது சுயநலனுக்காய் மு.க.ஸ்டாலின் ஆதரவு நிலை எடுத்தவர் இன்று ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்துள்ளார். இது எத்தனை காலத்துக்கோ..?

(குமுதம் குழுமத்தில் கோசல்ராம் ஓரங்கட்டப்பட்டு பிரியா கல்யாணராமன் கை ஓங்கியிருப்பதாய்ச் சொல்றாங்களே..?உண்மையா அண்ணாச்சி..! )

Monday, 14 July 2014

சிந்தனைக் களமா இது..? சிந்திக்குமா தி இந்து..!தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் அ.வெண்ணிலா

' தி இந்து ' தமிழ் நாளிதழில் கடந்த 10 ஜூலை 2014 அன்று என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் என்னும் தலைப்பில் சிந்தனைக்களம் பகுதியில் ஒரு சிறப்புக்கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இந்த சிறப்புக் கட்டுரையை அ.வெண்ணிலா என்பவர் எழுதியிருக்கிறார். இவர் சொந்த ஊர் வந்தவாசி . தனது 18 வயதிலிருந்து அரசுப்பள்ளியில் ஆசிரியராய் பணி புரிந்து வருகிரார்.23 ஆண்டுகள் பணி அனுபவம். இவர் கல்வி கற்றதும் அரசுப்பள்ளியில் தான்.இவரது தந்தையும் அரசுப்பள்ளி ஆசிரியர் தான் (ஓய்வு). 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கிறார். மாநில அளவில் அதன் மேடைகளில் தமிழ் மொழி, கல்வி மற்றும் பல சங்கதிகள் குறித்து எவ்வளவோ உரைகளை ஆற்றியிருக்கிறார். சமச்சீர் கல்வி குழு பாடத்திட்ட தயாரிப்பில் ஓர் ஆசிரியராக மட்டுமின்றி அறியப்பட்ட எழுத்தாளராகவும் அ.வெண்ணிலா இருக்கிறார்.

இவருடைய இந்தக் குறிப்பிட்ட கட்டுரை சிந்தனைக் களம் பகுதியில் சிறப்புக் கட்டுரையாக‌,( தி இந்து அப்படித்தான் கட்டம் கட்டுகிறது) முன்பு இதே நாளிதழில் இன்னொரு எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான இமையம் அவர்களின் பேட்டியை அடுத்து வெளியாகியிருக்கிறது.

நிற்க, இமையத்தின் கருத்துகள் தொடர்பாக நிறைய எதிர்வினைகள் வெளிப்பட்டிருந்ததாலும், அ.வெண்ணிலாவின் சிந்தனைக் கட்டுரை, அவரும் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால், கூடுதல் கவனத்தையும் முக்கியத்துவதையும் பெறுவதில் வியப்பு இல்லை.

வெண்ணிலாவின் கட்டுரையில் அனைவரைப்போல நாமும் எதிர்பார்த்தது அரசுப் பள்ளியில் கற்பித்தல் மற்றும் கற்றலில் எதிர்கொள்ளும் சவால்கள், கிராமப்புற மாணவர்கள் மற்றும் கிராமப்புற பள்ளிகளின் இன்றைய நிலை, மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற‌, இன்னும் பல புதிய செய்திகளைத் தான். அதுவும் கட்டுரையாளர் சமச்சீர் கல்வி என அறியப்பட்ட பொதுப் பாடத்திட்டப் பாடங்கள் உருவாக்கத்தில் முக்கியப் பங்களித்தவர் என்பதால் நம்முடைய எதிர்பார்ப்பும் அதிகமாய் இருந்தது.

ஆனால், அவரின் இந்த சிந்தனைக் கட்டுரையைப் படித்தபின், இக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' அலுவலகத்துக்கு நேரே சென்று, இந்தப் பக்க‌த்தின் பொறுப்பாளரை சந்தித்து, நறுக்கென நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்ற ஆத்திரம் தான் வந்தது. ஆனால் எரிபொருள் தான் விரயம் ஆகும் என்பதால் அதனைத் தவிர்த்து விட்டோம்.

இந்தக் கட்டுரை குறித்து இப்பொழுது பார்ப்போம். இது தான் அந்தக் கட்டுரையின் இணைய இணைப்பு

இந்தக் கட்டுரை குறித்த நமது சிறு விமர்சனம்.

'என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம் ' என்னும் தலைப்புடன் வெளிவந்திருக்கிற‌து. பொதுவாக தலைப்பு பத்திரிகை அலுவலகத்தில் தான் வைக்கப்ப‌டும். இங்கு கட்டுரையாளர் ஆசிரியர் என்பதால்  அவர் வைத்தாரா ? என்று தெரியவில்லை.

ஆனால் தலைப்பில் தவறு இருக்கிறது. ஓர் ஆசிரியரின் அனுபவம் என்று தான் இருக்க வேண்டும்.ஒரு ஆசிரியரின் அனுபவம் என்பது தவறு.

இனி கட்டுரைக்குள் செல்வோம்.

// மகளை எங்கு சேர்ப்பது என்று அப்போதுதான் யோசிக்கத் தொடங்கினோம்.மேலே சொன்ன எந்த ஊரின் பள்ளியில் சேர்ப்பது என்றாலும் மகளை விடுதியில் சேர்க்க வேண்டும். பதினான்கு வயதுக்குள் விடுதி வாழ்க்கையா என்று எனக்கே பீதியாக இருந்தது. அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள், இரண்டாண்டுகளில் மாணவர்களுக்குத் தரப்படும் மனநெருக்கடிகள், அங்கு நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள் இவற்றையெல்லாம் கேட்டறிந்த பிறகு மதிப்பெண் அறுவடை நிலையங்களான இந்தப் பள்ளிகளே வேண்டாம் என்று முடிவுசெய்தோம். //

14 வயதிலேயே மகளை விடுதியில் சேர்ப்பது குறித்த தயக்கத்தாலும் அங்கு சேர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த அச்சத்தினாலும் உள்ளூரில் இருக்கும் பள்ளிகளில் சேர்ப்பது குறித்த எண்ணம் அ.வெண்ணிலாவுக்குத் தோன்றியிருக்கிறது. மேலே சொன்ன ஊர்களில் மேற்கண்ட குறைபாடுகள் இல்லாத தனியார் பள்ளிகள் இருந்திருந்தால் அங்கேயே சேர்த்திருப்பார்.

அதன் பின் உள்ளூர் தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளியில் சேர்க்கலாமா என்பது குறித்த எண்ணம் எப்பொழுது துளிர் விடத் துவங்கியிருக்கிறது என்றால்...

//23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு, அரசாங்கத்திடமிருந்து நல்ல ஊதியத்தைப் பெற்று என்னை நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்திக்கொண்டு, என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் பலமுறை குற்றவுணர்ச்சியோடும் இயலாமையோடும் இருந்த எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது. //

// என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் //

கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்கு தனியார் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அதிக வசதிகள் கொண்ட மேம்பட்ட கல்வி கிடைக்கிறது என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது என்பதை இதன் மூலம் தெளிவாகவே அறிய முடிகிறது.

// எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது //

18 வயதில் பணிக்குச் சேர்ந்து 23 ஆண்டுகள் அரசுப்பள்ளியில் மாதம் முப்பத்து ஒன்றாம் தேதியில் பல்லாயிரம் சம்பளமும் வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை உட்பட இதர சலுகைகளையும் அனுபவித்து ஆசிரியராய் வேலை பார்த்த அ.வெண்ணிலாவுக்கு,தனியார் பள்ளிகள் தான் மேம்பட்டவை வசதியானவை என்னும் எண்ணம் கொண்டவருக்கு,அரசுப்பள்ளியில் தனது மகளைச் சேர்ப்பது குறித்து 23 ஆண்டுகால  பணிக்குப் பின்புதான் லேசாகத் துணிச்சல் வந்திருக்கிறது. நல்லவேளை இப்பொழுதாவது வந்ததே என்று எண்ணிப்பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

//நம் பள்ளியைவிட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும்? இந்த யோசனை எனக்குள் உதித்த கணம் மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமையை வார்த்தைகளில் சொல்ல முடியாது.//

அப்படியானால் இவர் 23 ஆண்டுகள் அரசுப்பள்ளிகளைத் தனியார் பள்ளிகளை விடத் தரம் குறைவானதாகவும், அதில் கல்வி கற்பவர்களையும் கற்பிப்பவர்களையும்  தகுதிக் குறைவானவர்களாகவும் தான் எண்ணியிருந்திருக்கிறார். எவ்வளவு கீழான மனப்பான்மை இது ?

அப்படியானால் தன்னிடம் பயிலும் மாணவர்களை இவர் எப்படி  நடத்தியிருப்பார்.?அவர்களுக்கு உள்ளன்போடும் இதய சுத்தியோடும் எப்படிக் கல்வி கற்றுக் கொடுத்திருப்பார்..? இவர்களெல்லாம் படித்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம்தானே இவரின் அடிமனதில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் வெளிப்படையாய் இருந்திருக்க முடியும்..?

(இவர் உளவியல் முதுநிலைப் பட்டப்படிப்பு வேறு படித்தவர் என்பது கூடுதல் தகவல் )

//எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மாணவர்களின் மனநிலை நம் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே என்று எனக்கு மயக்கம் வராத குறையாகத் தலைசுற்றியது. //

இது முரணாக இருக்கிறது. 23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் வேலைபார்த்ததாக பெருமிதப்பட்டுக்கொள்ளும்  அ.வெண்ணிலாவுக்கே இப்பொழுது தான் அரசுப் பள்ளிகள் குறித்த மோசமான எண்ணம் லேசாக மாறியிருக்கும் பொழுது, அவர் வீட்டில் உள்ளவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்..? சமூகத்தின் பொதுப்புத்திதானே அவர்களுக்கு இருக்க முடியும்..? இதற்கு எதற்கு மயக்கம் வர வேண்டும்.?

வெண்ணிலாவுக்கு 23 வருடங்கள் கழித்து நம் பள்ளியை விட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும் என்ற ஞானோதயம் உதித்து, மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமை உண்டானதைப்போல ,அவரைவிட கல்வி அறிவிலும், சிந்தனைத் திறனிலும் மிகவும் 'பின் தங்கிய ' வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 50 ஆண்டுகளில் என்றேனும் மனசுக்குள் இருக்கும் அக்கினிப் பாறை உடைந்து ஆலங்கட்டிகளின் குளுமையை உணராமலா போவார்கள்..?

கண்டிப்பாய் நடக்கும். வெண்ணிலா காத்திருக்கலாம்.

//பள்ளிக்கான ஆண்டுக் கட்டணமாக 750 ரூபாயைக் கட்டியபோது எனக்கு ஒரு கணம் ஸ்தம்பித்தது. இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எத்தனை லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறோம் ? //

இதுவும் படு அபத்தமாய் இருக்கிறது. அரசுப்பள்ளியில் 750 ரூபாய் ஆண்டுக்கட்டணம் என்பது அப்பொழுது தான் கட்டுரையாளர் அ.வெண்ணிலாவுக்குத் தெரியுமா என்ன‌..? பக்கத்தை நிரப்புவதற்கு சங்கதிகள் இல்லாததால் வசன வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கிறார் என்று தெரிகிற‌து.

// “உன்கூடவே வந்து போனால் பசங்க ஃபிரெண்ட்லியா இருக்க மாட்டாங்கம்மா” என்றாள். //

இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.அ.வெண்ணிலா மாணவ,மாணவிகளுடன் தோழமையுடன் பழகாமல் அதிகாரத்துடன் நடந்து கொள்பவர் என்று அவரது மகளே  அளித்த சான்றிதழாகத் தான் இதை நாம் கருத வேண்டியிருக்கிற‌து.அங்கு படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியில் பயில்பவர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆழ மனதில் குடிபுகுந்தவர் மாணவர்களை  எப்படித் தனக்குச் சமாமகவும் தோழமையாகவும் நடத்தியிருக்க முடியும்..? அவர்கள் எட்ட முடியாத உயரத்தில் தானே இவர் தன்னை வைத்திருப்பார். 

//அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், “எப்படிடா இருந்தது வகுப்புகள்?” என்றேன். “ம்மா...சூப்பர்ப்மா… எல்லா டீச்சரும் நல்லா நடத்துறாங்க...” என்றாள். //

நல்லவேளை வெண்ணிலா போன்ற ஆசிரியர்கள் அங்கு இல்லை போலிருக்கிற‌து.இதில் பாராட்டுக்குரியவர் 14 வயது நிரம்பிய அவரின் குழந்தைதான். சமூகத்தில் ஒட்டாத தாய்(தந்தையும்தான்), குழந்தை வாழும் குடும்பச் சூழல், குழந்தையின் நண்பர்கள் மற்றும் புறச்சூழல்கள் ஆகிய அனைத்தும் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தையின் விருப்பத்தை அதிகப்படுத்துவதாக இருந்தாலும், அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக கொஞ்சம் வலுக்கட்டாயமாய் அரசுப் பள்ளியில் சேர்த்தாலும், முதல் நாளே அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் ஒன்றிவிட்டதாகவும் அந்தச் சூழல் பொருந்தியிருப்பதாகவும் சொன்னதாய் எழுதியிருக்கிறார்.

கட்டுரையாளர் அ.வெண்ணிலா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  ராஜேந்திரன் இருவரும் தொகுத்த நூலான 'வந்தவாசிப்போர் -250' நூலை (அப்பொழுதைய ) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு வெளியிட உணவுத்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு பெற்றுக் கொள்கிறார்.

புகைப்படத்தில் திரு.தங்கம் தென்னரசு,திரு.எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.மு.ராஜேந்திரன் ஆகியோருடன் அ.வெண்ணிலா.


****

இந்த சிற‌ப்புக் கட்டுரையை படித்த பின்பு 'தி இந்து' நாளிதழில் இவரைப்போல அரசுப் பள்ளி ஆசிரியரான இமையம் அவர்கள் ஜூன் 26,2014 தேதியிட்ட அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.

//அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரி களோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.//

இமையம் சொன்னது வெண்ணிலாவுக்கு பொருந்தும். அதுவும் ஆசிரியர்,பெற்றோர் என இரண்டு பாத்திரத்தையும் அ.வெண்ணிலா வகிக்கிறார்.ஆக அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வெண்ணிலாக்கள்தான் காரணம்.

இதற்கு ஏதுவாய் வெண்ணிலாவின் பழைய நேர்காணலில் ஒரு பகுதி.

 //பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.   ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன  என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன்.// இது நக்கீரன் நேர்காணலில் அ.வெண்ணிலா சொன்னது.

ஆனால் பேட்டியில் சொன்னது  போல இன்னும் வெண்ணிலா மாறவில்லை என்று தெரிகிறது. இன்னும் வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. முன்பு இளம்பிராயம் என்பதால் வெளிப்படையாய் அழுது அடம்பிடித்திருக்கிறார். இப்பொழுதோ வயதாகி விட்டபடியாலும் சமுகத்தில் ஒரு அந்தஸ்து கிட்டி விட்டபடியாலும், மனதுக்குள் ஆசிரியப்பணியின் மீதான வெறுப்பை மறைத்து வைக்கும் லாவகம் கைகூடியிருக்கிறது என்று நம்புவோம். அதே சமயம். அரசு கொடுக்கும் பல்லாயிரம் சம்பளத்தையும் வேண்டா வெறுப்பாகத் தான் இவர் வாங்கியிருப்பார் என்று நம்புவோம்.

அது மட்டுமல்ல.இவர் அரசுப் பள்ளியில் வேலை பார்க்கிறார். இவர் அங்கம் வகிக்கும்  த.மு.எ.க. சங்கம் தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்துகிறது. இவரும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சமச்சீர் பாடத் தயாரிப்புக் குழுவில் அங்கம் வகித்திருக்கிறார். ஆக தான் பணிபுரியும் அரசு வேலைக்கு மட்டுமல்ல, தான் அங்கம் வகிக்கும் கட்சியின் கொள்கை, பேசும் பேச்சுக்கள் அனைத்துக்கும் உண்மை இல்லாமல் இவர் இருந்திருக்கிறார். 23 ஆண்டுகள் கழித்து தன மகளை அரசுப் பள்ளியில் சேர்த்ததை ஒரு மாபெரும் சாதனையாய் கட்டுரை வேறு வடித்திருக்கிறார்.தி இந்து அதனை பெருமையுடன் வெளியிட நாம் காசு கொடுத்து வாங்கிய பாவத்துக்காய் படித்துத் தொலைத்திருக்கிறோம்.

ஆக மொத்தத்தில் அ.வெண்ணிலா ஆசிரியர் பணிக்கான எந்தத் தகைமையும் அர்ப்பணிப்பையும் கொண்டிருக்க வில்லை என்பதை முழுமையாய் அறிய முடிகிறது. மொத்தத்தில் இந்தக் கட்டுரை சிந்தனைக் களத்திலோ சிறப்புக் கட்டுரையாகவோ வெளியிடுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாத ஒன்று என்பதை ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.
****


இந்தக் கட்டுரையை வெளியிட்ட 'தி இந்து' நடுப்பக்க பொறுப்பாளருக்கு  நாம் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.

அ.வெண்ணிலா ஆசிரியர்,கவிஞர்,எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர்,பதிப்பாளர்  என பல அடைமொழியுடன் வலம் வரலாம். அதில் அவர் குறித்த பங்களிப்புகள் கூட‌ செய்திருக்கலாம். அது குறித்து நீங்கள் நூல் விமர்சனம் எழுதலாம், கருத்து வாங்கிப் போடலாம். அது உங்கள் விருப்பம். (சில வாரங்களுக்கு முன்பு கூட‌  இந்திய ஆட்சிப் பணியாளர் ராஜேந்திரனும் அ.வெண்ணிலாவும் இணைந்து எழுதிய ஒரு கட்டுரை தி இந்து நடுப்பக்கத்தில் வெளியாகியிருந்தது. )

ஆனால் அ.வெண்ணிலா எதை கிறுக்கினாலும் அதைப் பிரசுரித்து வாசகன் மூளையில் திணிக்க வேண்டுமா என்ன..?  கட்டுரையை முழுமையாய் ஒருமுறைக்கு பல முறை வாசியுங்கள்.அது பிரசுரிக்கத் தகுந்த தகுதியுடன் இருந்தால் பிரசுரியுங்கள்.

இந்தக் கட்டுரையை அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற முறையில் எழுதியிருக்கிறார். ஆனால் ஆசிரியருக்கான அர்ப்பணிப்பையும்,அரசுப்பள்ளியில் பணிபுரிந்ததற்கான கடமையையும் கொண்டிருக்க வில்லை என்பதை மட்டுமல்ல, அவர் எழுதிய கட்டுரையும் அதற்கான தகுதியில் இல்லை என்பதையும்,மேலும் இதுவரை அவர் பேசிய அரசியலுக்கும் முற்றிலும் முரணாய் இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகளில் இருந்து மேலே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

அதை விடுத்து அவர் பிரபலம் என்பதற்காகவோ, உங்களின் கைபேசிப் பதிவில் அவரது பெயரும் எண்ணு ம் இருக்கக்கூடும் என்பதிலிருந்தோ அல்லது பக்கங்களை கடமைக்கு நிரப்பவேண்டும் என்பதற்காகவோ, படிக்கும் வாசகனை மடையன் எனக் கருதியோ யாரோ எதைப் பற்றி எழுதினாலும் வெளியிட்டு விடுவீர்களா?
*

ந‌மது சிற்றறிவுக்கு எட்டியபடி, அ.வெண்ணிலாவின் இந்தக் கட்டுரையை பத்திகளாக‌ச் சுருக்கி இமையம் நேர்காணலுக்கு எதிர்வினையாய் வாசகர் கடிதத்தில் வெளியிடலாம். அதைத் தாண்டி இதை வெளியிடுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
அதற்கான மாதிரியையும் இணைத்துள்ளோம். அந்தக் கடிதம் இப்படியும் இருக்கலாமோ ?

/ நான் வந்தவாசி அரசுப் பள்ளியில்  23 ஆண்டுகளாய்ப் பணிபுரிகிறேன். அங்கு சம்பளம் வாங்கினாலும் எனக்கு அரசுப் பள்ளி என்றால் ஓர் இளக்காரமும், தவறான எண்ணமும் இருந்தது. அதனால் எனது பணியில் நான் உரிய கவனம் செலுத்தியதில்லை. ஆனால் கடந்த மாதம் தான் இந்த எண்ணம் தவறானது என்பதை அறிந்தேன்.அதன் பிறகு தான் எனது மகளை அரசுப்பள்ளியில் கல்வி கற்க வைக்க முடிவு செய்தேன்.அதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு இருந்தது.ஆனால் எனது கண்டிப்பு மற்றும் உறுதியின் காரணமாய் அதில் வெற்றி பெற்றேன்.முதலில் இதனை கடுமையாய் எதிர்த்த எனது 14 வயது மகளும் இப்பொழுது மிகுந்த மகிழ்ச்சியுடன் பள்ளி சென்று வருகிறாள்.
எனக்கு நல்ல கல்வியை மட்டுமல்ல நல்ல பொருளாதார வாழ்க்கையையும் இன்று சமூகத்தில் ஓர் அந்தஸ்தையும்  அளித்த அரசுப் பள்ளி எனது மகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன். நீங்களும் அரசுப்பள்ளி குறித்து தவறான எண்ணம் வைத்திருந்தால் மாற்றி விடுங்கள்.

இப்படிக்கு,
அ.வெண்ணிலா,
ஆசிரியை.அரசுப்பள்ளி.வந்தவாசி-604408,
திருவண்ணாமலை மாவட்டம்.

 
சிந்திக்குமா இந்து..?

Tuesday, 8 July 2014

' ஏ' படம் பார்த்து அவுட் ஆன எடிட்டர் பாலிமரில் சங்கமம்...!லைமாறன்.இவர் சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர்.இதற்கு முன்பு திருச்சி மாலை முரசில் செய்தி ஆசிரியராய் பணிபுரிந்தவர்.

அவுட்புட் எடிட்டர் கலைமாறன் எப்போதும் மர்மமான நபர்தான்..அவரை அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் 3,4 தொலைபேசி எண்கள் வைத்திருப்பவர்.

அவர் திடீர் திடீர் என காணாமல் போனால் சன் நியூஸ் நிர்வாகமே அவரைத் தேடுவதற்குள் படாதபாடு பட்டுவிடும். அவர் வசிப்பிடம் கூட ஒன்றிரண்டு பேருக்குத்தான் தெரியும்.

கலைமாறனின் சகோதரிகள் கூட அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவ்வப்போது சன் நியூஸுக்கு போன் செய்து புலம்புவது வாடிக்கையான ஒன்று. அவ்வளவு மர்மமான நபர்!

சன் நியூஸில் அவுட்புட் எடிட்டர் ராஜராஜன், 3 வது திருமண பிரச்சனையில் வெளியேறிய நிலையில் அந்த இடத்தைப் பிடித்தார்.

சன் நியூஸில் தலைமை செய்தி ஆசிரியர் ராஜா  சிறைச்சாலைக்கு போக சன் டிவி எடிட்டர் உமாசங்கர் வசம் சன் நியூஸ் போனது. அப்போது கலைமாறன் செய்திப் பிரிவில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரானார்.

செய்திகளில் இருந்து ஒதுங்கியே இருந்த கலைமாறன் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் 'நிஜம்' போன்ற ஒன்றிரண்டு நிகழ்வுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். இதர ஓய்வு நேரங்களில் இணையதளத்தில் ஆபாச படங்களை விடாமல் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை டெக்னிக்கல் டீம் கண்டுபிடித்துவிட்டது.
கலைமாறன்

முதலில் இதை மறுத்த கலைமாறன், ஆதாரங்களுடன் டெக்னிக்கல் டீம் காண்பிக்க வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். அதனால் நிகழ்ச்சி பிரிவில் இருந்து மீண்டும் சப் எடிட்டர் அளவுக்கு கீழிறக்கப்பட்டு ஓரங்கப்பட்டார்.

வந்தோமா...ரெண்டு செய்தி எழுதிக் கொடுத்தோமா என்று போய்க் கொண்டிருந்தார் கலைமாறன். ராஜா மீண்டும் சன் நியூஸுக்கு வந்த போதும் கலைமாறனால் பழைய இடத்துக்கு வர முடியவில்லை. கேவலமான செயலால் கேவலமாக ஒதுக்கப்பட்ட கலைமாறன் தற்போது அங்கிருந்து வெளியேறி பாலிமர் டிவியில் இணைந்துவிட்டார்.

பாலிமர் டிவியிலாவது பிட்டு படம் பார்க்காம கொடுத்த வேலையை மட்டும் செய்யுங்க...

Thursday, 12 June 2014

காசு ;பணம் ;துட்டு = செய்தி செய்தி...!
டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டமைக்காக 854 வழக்குகளைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 41 வழக்குகள் .ரூ.100 லஞ்சம் வாங்கிய கடைநிலை ஊழியன் வேண்டுமானால் சிறைச்சாலைக்குப் போகலாம்; ஆனால் ஊடக முதலாளியோ,ஆசிரியனோ கண்டிப்பாய் ஜெயிலுக்குப் போக மாட்டார்கள்.

தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஒன்றும் கிட்டாதது போல்,தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்ப‌ட்ட இந்த புகார்களினாலும் ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. பணம் கொடுத்துச் செய்தி போட வைக்கும் பெய்ட் நியூஸ் (Paid news ) குறித்தும் அது போன்ற சூழல் தமிழ்நாட்டில் எப்படி நிலவுகிறது என்றும் ஒரு விரிவான பார்வை.

சம்பவம் 1:

முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்தது, இது!

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் கிளம்பத் தயாராகிறார், வி.ஜி.பன்னீர்தாஸ். மெதுவாக நகரத் தொடங்குகிறது. அதைப் பார்த்துவிட்டு வேகமாய் ஓடிவருகிறார், ஒரு நிருபர்.அவர் ஓடிவருவதைப் பார்த்த பன்னீர்தாஸ், தான் அமர்ந்திருக்கும் சீட்டின் பக்கம் உள்ள‌ கண்ணாடியை ஏற்றிவிட்டபடி டிரைவரிடம் ஏதோ சொல்ல.. உடனே அவரும் தன் இடப்பக்கம்  உள்ள‌ கார் கண்ணாடியை ஏற்றிவிடுகிறார். காரை ஓட்டிக்கொண்டே இதைச் செய்ததாலும் பழைய மாடல் என்பதாலும் அவரால் வேகமாக கண்ணாடியை மூடமுடியவில்லை. பாதி கண்ணாடி மூடிக்கொண்டு இருக்கும்போதே ஓடிவந்த நிருபர், தன் கையை காருக்குள் விடுகிறார்.

சும்மாவா? கார் நிறுத்தப்ப‌டுகிறது.” என்ன அண்ணாச்சி சொல்லாமக்கொள்ளாமக் கிளம்பிட்டீங்க” என கெக்கெக்க சிரிப்புடன் நிருபர், பன்னீர்தாஸுக்குத் தெரியாதா, அந்த சிரிப்பின் ஆயிரம் அர்த்தங்கள்? பாக்கெட்டில் இருந்து ஒரு ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுத்து, ஹிஹிஹியை முடித்த பிறகு, அங்கிருந்து நகர்கிறார். 

போகும்போது, கார் டிரைவருக்கு என்னென்ன வார்த்தைகளில் திட்டு விழுந்திருக்கும் என்பது அவர்கள் இருவ‌ரைத் தவிர பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவும் அறியாதது. 

சம்பவம் 2:

இது நடந்து இருபதாண்டுகள் கடந்துவிட்டன. 

சென்னை கடற்கரையில் மிலாடி நபியை ஒட்டி தொழுகை.

அதில் காங்கிர‌ஸ் பிரமுகர் ஜே.எம்.ஆருண் கலந்து கொள்கிறார்.நிகழ்ச்சி முடிந்ததும் அவரது சார்பில் அவரது உதவியாளர் (நவாஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்) அங்கு குழுமியிருக்கும் பிச்சைக் காரர்களை வரச் சொல்கிறார்.அவர்கள் கும்பலாக வருகின்றனர்.உடனடியாக அவர் சத்தம் போடவும் அவர்கள் ஒன்ற‌ன்பின் ஒன்றாக வரிசையாக நிற்கின்றான்ர்.வரிசையில் இருக்கும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 கொடுக்கிறார்.அனைவரும் வாங்கிக் கொண்டு அமைதியாய் கலைந்து செல்லத் தொடங்குகின்றனர்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து அங்கு காத்திருக்கும் பத்திரிகையாளர்களை வரச் சொல்கிறார்.வழக்கம் போல் கும்பலாக அவரைச் சுற்றி வளைக்கின்றனர்.ஒரு நிருபருக்கு ரூ.100 அளிக்கிறார். ஆனால் ஒரே சமயத்தில் ஆளாளுக்கு கையை நீட்டி அவரை சுற்றி வளைத்து விடுகின்றனர்.அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.பிளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க எல்லோருக்கும் தரேன் என அவர் எவ்வளவோ சொல்லியும் கூட்டம் அவரை மொய்ப்பதை விடவில்லை. அவரால் எதுவும் செய்ய முடிஅய்வில்லை.
இந்த நிலையில் அப்பொழுது தான் கலைந்து சென்ற பிச்சைக்காரர்கள் கூட்டம் திரும்ப ஓடி வந்து இந்த கூட்டத்தில் ஐக்கியமாகிறது.பத்திரிகையாளர்களை திட்ட முடியாத கடுப்பில் இருந்த நவாஸ் அவர்களைப் பார்த்ததும் உங்களுக்குத் தான் அழுதுட்டன்ல, இன்னும் எதுக்குடா வர்றீங்க போங்கடா என எரிந்து விழுகிறார்.

அவர்களில் ஒருவர், என்ன சார் எங்களுக்கு பத்து ரூபா கொடுத்தீங்க,இவங்களுக்கு ஆளுக்கு நூறு ரூபா கொடுக்கீங்க..ஏன் இப்படி பண்றீங்க ? என்று கேட்கிறார்.

அவங்க எல்லாம் ஜர்னலிஸ்ட் அவங்களுக்கு நூறு ரூபா தான் உங்களுக்கு பத்து ரூபா தான் என சொல்கிறார். அவரது பதிலில் திருப்தியடையாத பிச்சைக்காரர் அவங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் என அடுத்து ஒரு கேள்வியைப் போடுகிறார்.

அதற்கு பதில் சொல்ல முடியாத நவாஸ், யோவ்  உனக்குப் புரியாதா..?அவங்க ஜர்னலிஸ்ட் நீ பிச்சைக்காரன்.அவங்களுக்கு  அது தான் உனக்கு இது தான் போய்யா என்று எரிந்து விழுகிறார்.அதன் பின்பு பிச்சைக்காரர்கள் கூட்டம் கொஞ்சம் பொருமலுடன் இடத்தைக் காலி செய்கிறது.பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் கூட்டம் மறுபடியும் நவாசை மொய்க்கிறது.

சம்பவம் 3:

இது சமீபத்தில் நடந்தது.

சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த ஒரு பிரஸ் மீட்.

மறுநாள் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் நடைபெற இருக்கும் புரட்சி பாரதம் கட்சி ஆர்ப்பாட்டம் குறித்து தான் பிரஸ் மீட்.

புரட்சி பாரதம் கட்சி சார்பில் அதன் தலைவர் கலந்து கொள்கிறார்.அரங்கில் சுமார் நாற்பது,ஐம்பது பேர் இருக்கின்றனர்.இதில் உண்மையான நிருபர்களும்,அப்படிச் சொல்லி எப்பொழுதும் பிரஸ் கிளப்பைச் சுற்றிக்கொண்டு திரியும் கும்பலும் அடக்கம்.

பிரஸ் மீட் முடிந்ததும் பெரும்பாலோனோருக்கு கவர் கொடுக்கப்ப‌டுகிற‌து. கூட்டம் இனிதே கலைகிறது.

ஐம்பது நிருபர்களுக்கு கவர் கொடுத்த நிலையில் மறுநாள் எந்த செய்தித்தாளிலும் ஒரு வரிச் செய்தியும் வரவில்லை என்பது இங்கு முக்கியமானது. 

அன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கம் எதிரில் புரட்சி பாரதம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற‌து. நிருபர்கள் வழக்கம் போல் ஐம்பது பேர் கூடியிருக்கின்றனர்.கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.திடீரென்று ஒருவர் மைக்கைப் பிடிக்கிறார்.

பேச்சு உச்சகட்ட சூட்டுக்குப் போனது.. 

” இங்கே நிறைய பத்திரிகைக்காரங்க கூடியிருக்கீங்க..நேற்றும் இப்படித்தான் வந்தீங்க..எல்லோருக்கும் கவர் கொடுத்தோம்.ஆனா இன்னைக்கு ஒரு பேப்பரிலும் ஒரு செய்தியும் வரல்லை.காசு வாங்கிட்டும் யாரும் போடல்லை.அதனால இன்னைக்கு யாருக்கும் கவர் கிடையாது,எந்த நாயும் அதுக்காக நிக்க வேணாம் எனச் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படுகிறது.சிலர் எதிர்த்துப் பேசுகின்றனர்,சிலர் ஒரு மாதிரியாய் நெளிகின்றனர்.சிலர் அவரிடன் நியாயம் கேட்கின்றனர்.இதெல்லாம் சில நிமிடங்கள்தான்.அதன்பின் ஒவ்வொருவராகக் கலைந்து செல்கின்றன்ர்.

அவர்களில் சிலர், சற்று நேரத்தில் அருகிலுள்ள பிரஸ் கிளப்பில் இருந்து சிலரை அழைத்து வருகின்றனர். லெட்டர் பேடு பத்திரிகையாளர் சங்கம் நடத்தும் சகாயராஜ் தான் முன்னின்று வந்து பேசுகிறார். மைக்கை வாங்கிக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார்.

” சற்று நேரத்திற்கு முன் இங்கு பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ள‌னர்.உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம்,ஆனால் நான்காவது தூணான எங்களை நாய்கள் என்று கடுமையாக பேசியது எங்களைக் காயப்படுத்தியுள்ளது.ஆகவே தாங்கள் தயவு செய்து அவ்வாறு குறிப்பிட்டமைக்கு மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவித்தால் அது சரியானதாக இருக்கும். இக்கூட்டத்தின் தலைவர் தயவுசெய்து இப்பிரச்னைக்கு நல்ல தீர்வை அளிக்க வேண்டும்” என ஒரு பக்கம் காலில் விழுந்து கொண்டு இன்னொரு பக்கம் சுயமரியாதைக்குரல் எழுப்புகிறார். 

'லெட்டர் பேடு' பேசியதற்குப்பின்னர் ஏற்கனவே பத்திரிகையாளர்களைத் திட்டிய நபர் மைக்கைப் பிடித்து பின்பு மீண்டும் பேசுகிறார். 

“ நான் பத்திரிகையாளர்களைப் பற்றிப் பேசியது அவர்களைக் காயப்படுத்தியது என்று அதன் தலைவர் சொல்கிறார்.நான் நாய் என்று திட்டியது தவறாய் இருக்கலாம்,அதே சமயம் அவர்கள் செய்ததும் தவறு தான்.இரண்டு தரப்பிலும் தவறு இருக்கிறது. அத‌னால் நான் மன்னிப்புக் கேட்க முடியாது.அதே சமயம் இன்னொன்றையும் மீண்டும் சொல்கிறோம்.இன்றைக்கு யாருக்கும் கண்டிப்பாய் கவர் கிடையாது.அதற்காக யாரும் காத்திருக்க வேண்டாம். இத்துடன் இப்பிரச்சனை முடிந்தது. இனி அடுத்த பேச்சளார் பேசுவார்” என அறிவித்து விட்டு இன்னொருவரிடம் மைக்கைக் கொடுக்கிறார்.

பத்திரிகையாளர் என்போரும் அவர்களின் லெட்டர் பேடு உம், வெற்றி எனக் கலைந்துபோவதா?அல்லது முன்பை விட  அதிகமாய் அசிங்கப்பட்டு விட்டோம் என போர்க்கொடி தூக்குவதா ? என யோசித்துக்கொண்டு நின்று இருந்தனர்.ஆனால் அங்கிருந்த கூட்டமோ இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்க‌வில்லை. அவர்களை, இவர்களால் என்ன செய்துவிட முடியும்? வேறுவழியின்றி கர்மசிரத்தையோடு கலைந்துசென்றார்கள்.       
- வெவ்வேறு காலகட்டங்களில் நடந்திருந்தாலும், இந்த சம்பவங்களில் பொதுவான அம்சத்தைப் பார்க்கமுடியும். செய்தியைச் சேகரிக்கவரும் நிருபர்களில் அல்லது இல்லாத பத்திரிகைக்கு எழுதாத ரிப்போர்ட்டர் எனச் சொல்வார்களே, அதைப்போல நிருபர் என சொல்லிக்கொண்டு திரியும் ஆட்கள், ” செய்தி சேகரிக்க வந்திருக்கிறோம்; அதற்கு கையூட்டாக நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஏதாவது கொடுங்கள்” எனக் கேட்பதுதான். ஏன் இவர்கள் இப்படி பிச்சை எடுப்பதைவிடக் கேவலமாக நடந்துகொள்கிறார்கள் எனக் கேட்கத் தோன்றும். பெரும்பாலும் இந்த கவுரவ/ அதிகாரப் பிச்சைக்காரர்கள் சொல்வது, எங்களுக்கு போதுமான சம்பளம் கொடுப்பதில்லை; அதனால்தான் இப்படி செய்திக்கு வரும் இடங்களில் வாங்கிக்கொள்கிறோம் என நியாயப்படுத்துகிறார்கள். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும், இப்போது வாழ்க்கைத் தேவைக்கான அளவைவிட எத்தனை மடங்கு அதிகம் கொடுத்தாலும், கவர் பணம் வாங்கும் பழக்கம் இவர்களைவிட்டுப் போகாது. 

தே அயோக்கியத்தனம் தான், இவர்களை கைநீட்டி பிச்சையெடுக்க வைக்கும் பத்திரிகை முதலாளிகளிடமும் வேர்கொண்டு, விழுதுகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறது; இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களின் ‘நிலை’க்கு ஏற்றதுபோல!

ஆட்சி நிர்வாகம், காவல்துறை போன்ற அதிகார மையங்களிலும் பெரு முதலாளிகளிடமும், தனிப்பட்ட, நிறுவனத்துக்கான, வேண்டப்பட்டவர்களுக்கான சலுகைகளைப் பெற்றுவந்த பத்திரிகை முதலாளிகள், அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமான/ பாராட்டு கிடைக்கும்வகையில் செய்திகளைப் பிரசுரித்தார்கள். அல்லது பிரசுரிக்காமல் அமைதி காத்தார்கள்;அதைப்போலவே பத்திரிகையின் பொறுப்பில் உள்ளவர்களும் செய்துவருவதும் நடக்கிறது.


ந்தச் சீர்கேட்டில் வர்க்கம்,மதம்,சாதி,நட்பு என பல பிரிவுகள் உள்அடங்கியிருக்கிறன‌.. விரல்விட்டு எண்ணும் சில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

தியாகராய நகரில் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள்,வன்முறைகள் ,மரணங்கள் போன்ற சம்பவங்களில், மிகக்குறைந்த அளவு கூட செய்தித்தாள்களிலும்,ஊடகங்களிலும்  பதிவாவதில்லை.அதற்குக் காரணம் அந்த நிறுவனங்கள் கொடுக்கும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் ஊடகங்களுக்குக் கிட்டும் வருமானம் தான்.

விகடன் குழுமத்தில் கேடி மாறன் சகோதரர்களுக்கு எதிரான துரும்பளவுச் செய்தியும் பதிவாகாமல் இருப்பதற்கு காரணம் மாறன் குடும்பத்துடனான விகடன் குழுமத்தின் வர்த்தக உறவு என்பதை நாம் அறிவோம்.

ஆனால் அனைத்து நேரங்களிலும் வருவாய்க்காக மட்டுமே நிறுவனங்கள் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. சமயம் பார்த்து ஊடகங்கள் தன் 'நேர்மையை'  நிரூபிக்கும்.

எடுத்துக்காட்டாக சரவண பவன் ஓட்டல் நிர்வாகம் தன்  விளம்பரங்களை எப்பொழுதும் தினமலர்,தினமணி போன்ற நாளிதழ்களில் தான் கொடுக்கும். மேற்கண்ட பத்திரிகைகளின் வாசகர்கள்தான் தனது இலக்கு வாடிக்கையாளர்கள் என்று கருதியதாலோ அல்லது தினத்தந்தி தனது லெவலுக்கு ஏற்ற பத்திரிகை அல்ல எனக் கருதியதாலோ தினத்தந்தியில் விளம்பரம் கொடுத்ததில்லை.

ஆனால் ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவண‌பவன் முதலாளி ராஜகோபால் கைது செய்யப்பட்ட பொழுது,    அதுவரை ஆண்டுக்கு பல லட்சங்கள் விளம்பர வருவாய் பார்த்த தினமலரும் தினமணியும் போட்டி போட்டு அந்த வழக்கு குறித்த செய்திகளையும் பின்னணிக் கதைகளையும் வரிந்து கட்டி எழுதின.ஆனால் அதே சமயம் இதுவரை சரவண பவனால் எந்த விளம்பர ஆதாயமும் அடையாத தின‌த்தந்தியோ வழக்கு குறித்த செய்தியைத் தவிர்த்தது.முடிந்த மட்டும் அடக்கி வாசித்தது.

அங்கு தினத்தந்தியிடம் வர்த்தக நலனை விட ஜாதிப்பாசமே முன்னின்றது."என்ன தான் இருந்தாலும் அவன் நம்மாளு " என்பதே அதில் பொதிந்து இருந்தது.

தனது முக்கிய விளம்பரதாரர் என்றாலும தவறைத் தட்டிக்கேட்டு நடுநிலையுடன் 'தினமலர்' செய்தி போட்டது  என்று நாம் மேலோட்டமாகக் கருத முடியாது.காசையும் வாங்கிக்கிட்டு காட்டியும் கொடுத்தது தினமலர் என்று வேண்டுமானால் கருத முடியும்.ஏனென்றால் அதன் லட்சணம் அப்படித்தான்.

இந்துத்துவத்தின் பிரச்சார பீரங்கியாக விளங்கும் 'தினமலர்' பிரேமானந்தா,சதுர்வேதி போன்றவர்கள் வல்லுறவு,கொலைக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் பொழுது அவர்களை இந்துச்சாமியார்கள் என்றும் கருதாமல்அவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது. ஆனால் காஞ்சி ஜெயேந்திரன்அதே குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்ட‌ பொழுது ஜெகத்குரு,சங்கராச்சாரி என்றும் அவர்கள் குற்ற‌ம் செய்யாத உத்தமர்கள் என்றும் லோகத்தில் உள்ள‌ அனைவரிடமும் கருத்தை வாங்கிப் போட்டது. வாழை இலையில் மலம் கழிக்க வாய்ப்பளித்தாலும் கைதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என சி.பி.எம்.மின் சீதாராம எச்சூரியின் கருத்தை வாங்கி பிரதானமாய் வெளியிட்டது.

இதுதான் தினமலர்.

சரவண‌ பவன் ராஜகோபால் 'அவாளாக‌ப்' பிறந்திருந்தால் இதே தினமல்ர் ஜீவஜோதி குறித்த நெகடிவ் செய்திகளை வெளியிட்டு பக்க‌ங்களை நிரப்பியிருக்கும் !

***
இது ஒருவிதம்,இது போல இன்னும் பலவிதம் இருக்கிறது.

அரசியல் அரங்கில் காணாமல் போன கட்சிகளை திரும்பவும் சீனுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவாக கட்சித்தலைவர் அல்லது அடிப்பொடிகளின் பேட்டி,  தகுதி இல்லை என்றாலும் தனக்குப் பிடித்த கவிஞரின் கவிதையை அடிக்கடி வெளியிடுவது,அரசியல் அரங்கில் இன்னொருவர் செய்த போராட்டத்தின் மூலம் கிட்டிய வெற்றியை தனக்குப் பிடித்த தலைவருக்குச் சொந்தமாக்க‌ ஒரு செய்தி, இன்னாருக்கு மந்திரி பதவி அல்லது இன்ன பதவி கிடைக்க ஒரு செய்தி, இன்னாரின் மந்திரி பதவியைப் பறிக்க அதற்கு எதிரான லாபிக்கு ஆதரவாய் ஒரு செய்தி,தனக்கு எப்பொழுதும் செய்தியைக் கசிய விடும் அதிகார மட்டத்தை மகிழ்ச்சிப்ப‌டுத்தி அவர்களுக்குப் பதிலுதவியாய் ஒரு செய்தி,சில நேரங்களில் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப துரும்பைத் தூணாக பூதாகரப்ப‌டுத்துதல் என மலை போல்  திட்டமிட்டு வெளியாகும் அல்லது வெளியாகாத செய்திகள் குறித்தான‌ எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒருமுறை அழைத்து மேடையில் இடம் கொடுத்து நான்கு வார்த்தை பேச சொல்லி விட்டால் போதும். அதன் பின் தன்னை அழைத்தவர்கள் நடத்தும் நூல் வெளியீடு மட்டுமல்ல எந்த நிகழ்ச்சி தொடர்பாகவும் தான் வேலை பார்க்கும் பத்திரிகையில் செய்தியோ கட்டுரையோ வரவைத்து விடுவார்கள்.


இது சுயவிளம்பரத்துக்கு மாரடிக்கும் வகை.

பெரும் பத்திரிகைகளில் மட்டுமல்ல;சிறு பத்திரிகைகள் வரை,பக்கங்களை விற்பனைக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தேவேந்திர பூபதி மாதிரியான மொக்கை கவிஞரின் கவிதையெல்லாம் தொடர்ந்து இதழில் வருகிறது என்றால் வணிகவரித்துறை ஆணையரின் 'செல்வாக்கு' அந்தப் பத்திரிகைக்கு தவறாக ஏதோ ஒரு வழியில் கிடைக்கிறது என்று அர்த்தம்.
மேற்கண்டவை எல்லாம் முறையற்ற பல வகைகளில் ஊடகத்தைப் பயன்படுத்துவது குறித்தானது. அது மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று நேரடியாக, ” இவ்வளவு, இப்படியாக செய்தி போடுகிறேன்; அளவுக்கு ஏற்ப பணம் கொடுங்கள். உங்களின் தேர்தல் பிரச்சாரத்தை செய்தி வடிவிலேயே விளம்பரம்போல மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம்” என பத்திரிகை முதலாளிகளே, மோசடியில் இறங்கும் அளவுக்கு நடந்து வருகிறது.

இதைத்தான், பணம்கொடுத்து போடப்பட்ட செய்தி (Paid News) என்று தனியான 'பெருமைகொண்ட' ஒரு வார்த்தையாகவே குறிப்பிடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் பெருமை பீற்றப்படும் பத்திரிகையில், இப்படி பெருமைக்கே உலைவைக்கும் கேவலம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பணம் வாங்கிச் செய்தி போடுவதும் அதில் ஒன்று.'ணத்துக்குச் செய்தி போடுவது' என்பது கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பட்டவர்த்தனமாக வெளியில் தெரிந்துள்ளது.ஆனாலும் யாரும் இது குறித்து அஞ்சுவதோ,அதற்காக தங்களை மாற்றிக்கொள்ளவோ இல்லை.அதன் விளைவு தான் இந்த தேர்தலில் அதிக அளவிலான இத்தகைய வழக்குகள்.

இது குறித்து நாம் இன்னொரு தனிப் பதிவில் பார்ப்போம். 

தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலில் தினமல்ர்,தினமணி,தினகரன்,தந்தி டிவி,புதிய தலைமுறை,சன் குழுமம்,குமுதம் ஆகிய பெரும்பாலான ஊடகங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் ஆதரவான தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாய் வெளிப்படுத்தின.இதற்கான பேரங்களும் பின்னணியும் என்னென்னவோ !

ஆனால் வெளிப்படையாவை அல்லாமல் தமிழ் ஊடகங்களில் நடந்தேறியுள்ள பணத்திற்குச் செய்தி குறித்தும், தமிழ் ஊடக‌ச்சூழலில் இது எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்று பேச வேண்டிய தருணம்.காலை நாளிதழ்களில் இது இலை மறை காயாக இருந்தாலும் மாலை நாளிதழ்களில் இது பட்டவர்த்தனமாய் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியும்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழ்நாட்டில் இது அதிகமாய் மாலை நாளிதழ்களில் தான் நடந்த‌து.

எடுத்துக்காட்டாய் மாலை நாளிதழ்களில் சன் குழுமத்துக்குச் சொந்தமான‌  'தமிழ் முரசு' வைப்பார்த்தோமானால் இந்த மெகா பிளான் நடைபெற்றிருக்க அதிக சாத்தியங்கள் இருக்கிறது.

எப்படி என்றால் 20 நாட்கள் பேக்கேஜ் என்று ஒன்று இருக்கிறது.இந்த பேக்கேஜில் இணையும் வேட்பாளர் குறித்தும் அவரது பிரச்சாரம் குறித்தும்  தினசரி மூன்று பத்தி செய்தி.அத்துடன் ஒரு புகைப்படம். மொத்த‌ம் 20 நாட்கள்  வெளியிடப்படும்.மொத்தக் கட்டணம் ரூ.ஒன்றரை லட்சம். மேற்கண்ட தொகை  சம்பந்தப்பட்ட பத்திரிகை நிர்வாகத்திற்குச் சென்று விடும்.

இந்த முறைகேட்டை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களும் இதனை அதிக ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஏனென்றால் விளம்பரக் கட்டணத்தை விட இது மிக குறைவு என்பது ஒரு காரணம். விளம்பரத்தை விட இதற்கு வீச்சு அதிகம் என்பதும் இன்னொரு காரணம்.

பத்திரிகை நிர்வாகமும்,தங்களது திட்டமிடப்பட்ட வழக்கமான வருவாயை விட,குறுக்கு வழியில் வந்தாலும்  இது எதிர்பாராத கூடுதல் வருவாய் என்பதால் இதனைத் திட்டமிட்டு ஊக்குவிக்கிறது.

பத்திரிகை மேனேஜர்கள் தான் இதனை நிர்வகிக்கிறார்கள். எந்தவிதக் கணக்கு வழக்குமற்ற இந்தத்தொகை முழுக்க முழுக்க நிர்வாகத்திற்குச் செல்கிறதா அல்லது மேனேஜர் ஒரு பகுதியைச் சுட்டு விடுவாரா என்பதெல்லாம் யாராலும் அறிய முடியாதது. இந்தப் பணியை பெரும்பாலும் நிருபர்கள் தான் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு செய்கிறார்கள். அவ்வாறு வேட்பாளர்களிடம் இருந்து தொகை பெற்றுக்கொடுக்கும் நிருபருக்கு வழக்கமாய் விளம்பரம் பெற்றுக்கொடுத்தால் கொடுக்கப்படும் 15 விழுக்காடு கமிஷ‌ன் இதிலும் கொடுக்கப்படும். இதற்கு ரசீதோ எந்த ஒரு ஒப்புகையோ இல்லாததால் சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நிருபர்கள் தங்கள் சாமர்த்தியததைக் காட்டவும் வாய்ப்புண்டு.வேட்பாளர்களிடம் கூடுதலாய் வாங்கித் தாங்கள் பதுககுவதும் நடக்கிறது.ஏனென்றால் தேர்தல் பரபரப்பில் எந்த வேட்பாளரும் இந்தப்பணத்தை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. சம்பந்தப்பட்ட நிருபரை வைத்து விசாரிப்பது போன்றவை அதனால் சாத்தியமில்லாத விஷயம்.

'தமிழ் முரசு' சென்னைப் பதிப்பை மட்டும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

சென்னை,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ஆகிய நகரங்க‌ளுக்கு இப்பதிப்பு அச்சாகி செல்கிறது.இந்தப் பகுதியில் தென்சென்னை,வடசென்னை,மத்திய சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம் ஆகிய ஏழு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

தமிழ் முரசுவைப்பொருத்த வரை அதன் பல்வேறு பக்கங்களில் இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல் செய்திகள்,தமிழ்நாடு தேர்தல் செய்திகள் என ஒதுக்கப்ப‌ட்டாலும் சென்னை அதன் சுற்றுப்புற தொகுதிகள் குறித்த செய்திகள் இடம்பெறுவது அதன் ஆறாவது பக்கத்தில் தான்.

மேலும் கடந்த தேர்தலைப் பொருத்த வரை அது ஜெயலலிதா எதிர்ப்புக்கு அதிக முக்கியத்துவமும், காங்கிரஸ்,திமுக,பாரதிய ஜனதா ஆதரவுச் செய்திகளை அதிக அளவிலும் வெளியிட்டது. சென்னை நகரத்தைப் பொருத்த வரை, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பத்திரிகை முதலாளிகளில் ஒருவர் தயாநிதி மாறன் குறித்த செய்திகள் மட்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

திமுகவின் வடசென்னை,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம் அரிதாகத்தான் தான் வெளியிடப்பட்டது. மாநிலம் தழுவிய,இந்தியா முழுமைக்கும் பொதுவான செய்திகள் தான் அதிகம் வெளியிடப்பட்டன.

தேர்தலுக்கு கடைசி பத்து நாட்கள் மட்டும் சென்னையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்த செய்திகள் ஓரளவுக்கு வெளியிடப்பட்டன.

ஆனால் இதற்கு மாறாக தேர்தல் அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்த காலத்தில் இருந்து  தேர்தல் முடியும் வரைக்கு மூன்று வேட்பாளர்கள் குறித்து ஒரு நாள் இடைவெளி கூட விடாமல் தொடர்ச்சியாக செய்தி வந்திருக்கிறது என்றால் அது என்ன கணக்கு.?

அவர்கள் திமுக,அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களும் கிடையாது. ஆனாலும் செய்தி வருகிறது என்றால் அவர்கள் மிக முக்கியமானவர்கள் தானே..?

அந்த முக்கியத்துவம் பெற‌ அவர்கள் என்ன கொடுத்தார்கள் என்னும் கேள்வி எழுகிறது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வட சென்னையில் போட்டியிட்ட அதன் வேட்பாளர் திரு.நிஜாம் முகைதீன், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் ஆரம்பித்து வடசென்னையில் போட்டியிட்ட திரு.பால் கனகராஜ், தென்சென்னையில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட திரு.இல.கணேசன் ஆகியோர் தான் இவர்கள்.

சொல்லப்போனால் தமிழ் முரசில் ஒரு நாள் தயாநிதி மாறன் பிரச்சார செய்தி கூட வெளிவராமல் இருந்திருக்கிறது. ஆனால் மக்கள் 'பலம்' பொருந்திய மேற்கண்ட வேட்பாளர்களின் செய்திகள் வராத நாள் இல்லை.

இனி உங்கள் பார்வைக்கு.நாம் 20 நாட்களின் பிரதிகளைக் கொடுத்திருக்கிறோம்.


3-04-2014

04-04-2014

05-05-2014

06-04-201407-04-201408-04-2014

09-04-201410-04-2014


11-04-2014


12-04-201413-04-201414-04-2014

15-04-2014


16-04-201417-4-2014

18-04-201419-04-201422-04-2014


23-04-2014
( இதில் இரண்டு நாள் பிரதி விடுபட்டுள்ளது.தவறவிட்ட அதனை விரைவில் பதிவேற்றுகிறோம்.)

 மேற்கண்ட வடசென்னை,தென்சென்னை ஆகிய‌ தொகுதிகளில் தயாநிதி மாறன் சார்ந்துள்ள திமுக போட்டியிடுகிறது.ஆனால் அந்தக் அக்க‌ட்சி வேட்பாளர் குறித்த செய்தியைத் தேட வேண்டியிருக்கிறது. 

வடசென்னையில் எத்தனையோ வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்கு இல்லாத‌ முக்கியத்துவம் நிஜாம் முகைதீனுக்கும்,பால் கனகராஜூக்கும் ஏன்..?

இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியாய் 20 நாட்கள் மூன்று பத்தியும் ஒரு புகைப்படமும் தமிழ் முரசுவில் வெளியிட்டும் வடசென்னையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வேட்பாளர் வாங்கிய ஓட்டுகள்- 694,பால் கனகராஜ் வாங்கிய ஓட்டுகள் 60.  

இந்த வேட்பாளர்களின் செல்வாக்கு இவ்வளவு தான்.இவர்களுக்குத் தான் இத்தனை செய்திகள்.இதை விட வடசென்னையில் 'தமிழ் முரசு' சில நூறு காப்பி விற்பனை ஆகும் என்பது சந்தேகமில்லை.

அதைப்போல தென்சென்னையில் திமுக வேட்பாளர் உட்பட எத்தனையோ வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் அவர்களுக்கு கூட இல்லாத முக்கியத்துவம் தோல்வியடைந்த இல.கணேசனுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டுள்ள‌து.

மாறன்களின் ராஜ்ஜியத்தில் கருணாநிதிக்கு கூட‌ பிரதிபலன் இல்லாமல் குண்டூசி கூட கிடைக்காது என்பது நாம் அறியாததா..?

அப்படி இருக்கையில் தினமும் மூன்று பத்தி செய்தியும் ஒரு புகைப்படமும் சும்மாவா வெளிவரும்..?

தமிழ் முரசுவில் நடைபெற்றிருப்பது ( Paid news ) என்னும் முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது.

மிழ் முரசுவில் மட்டும் இது போன்ற இதழியல் சீர்கேடுகள் ஒரே நாளில் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறிவோம். மற்ற மாலை நாளிதழ்கள், எல்லாவற்றிலும் கூடுதல் அனுபவம் கொண்டிருக்கும் பொழுது இதில் மட்டும் பின் தங்கி விடுமா? ஆனால் அவை சென்னையில் போட்டியிட்ட‌ பதிவு செய்யப்பட்ட,செய்யபெறாத,முக்கியமான சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் பரவலாக வாய்ப்பளித்து அவர்களின் செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். 

லட்சக்கணக்கில் வாக்கு வாங்கும் வேட்பாளர்களில் இருந்து சில நூறு வாக்குகள் வாங்கும் வேட்பாளர் வரைக்கும் பிற‌ நாளிதழ்களில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.ஆகவே அவற்றின் முறைகேட்டைக் கையும் களவுமாய் பிடிக்க முடியவில்லை.அவர்களின் 'தொழில் நேர்த்தியும்' ஒரு காரணம்.

இங்கு தமிழ் முரசு வின் சென்னைப்பதிப்பில் நம் கண்ணுக்குத் தெரிந்த ஒரு முறைகேட்டை மட்டுமே வெளிக் கொணர்ந்திருக்கிறோம். தமிழ் முரசு பல இடங்களில் பதிப்பிக்கப்ப‌டுகிறது. தமிழ்நாட்டில் இதைப்போல இன்னும் பல ஊடகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் எத்தனை எத்தனை பணத்துக்குச் செய்திகளோ யாருக்குத் தெரியும்.


சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காசுக்குச் செய்தி வெளியிடுவதில் சிறு முனையைத் தான் கண்டுபிடித்திருக்கிறோம்.இன்னும் நம் கண்ணில் தட்டுப்படாத எத்தனையோ பெரும் பனிப்பாறைகள் இருக்கின்றன.

பத்திரிகைகள் உண்மையை மட்டுமே எழுதும் என்ற நம்பிக்கையில் அதனைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் வாசகனை மடையர்களாகக் கருதி, தங்களின் வருவாயைப் பெருக்க எந்த இழிநிலைக்கும் செல்லத் துணிந்துள்ள இந்த கபடதாரிகளை என்ன செய்யலாம்..?